அருங்குன்றம் சாலை பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டி கண்துடைப்பு
அருங்குன்றம், செப். 11– கல் குவாரி லாரிகளால் அருங்குன்றம் சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தில், நேற்று
கல் குவாரி லாரிகளால் அருங்குன்றம் சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தில், நேற்று கண்துடைப்பிற்காக ஜல்லிக்கற்களை கொட்டி அரைகுறையாக மூடப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் – சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் கிராமம் உள்ளது. அருங்குன்றம் சுற்று வட்டாரத்தில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மூலம் அருங்குன்றம் சாலை அடிக்கடி சேதமாகிறது.
குறிப்பாக அருங்குன்றம் பேருந்து நிறுத்தம் எதிரிலான சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்படுகிறது. இப்பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
விபத்தின் போது மண் கொட்டி சமன் செய்வதும், பிறகு ஓரிரு நாட்களில் அச்சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
இச்சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை தார் ஊற்றி அல்லது கான்கிரீட் கலவை மூலம் சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.
அதையடுத்து, கல் குவாரி உரிமையாளர்கள் நடவடிக்கையின் பேரில் அருங்குன்றம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் வழக்கம் போல் ஜல்லிக் கற்கள் கொட்டி நேற்று மூடப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களில் அங்கு மீண்டும் பள்ளம் ஏற்படுவது உறுதி என்பதால் கண் துடைப்புக்காக செய்துள்ள இந்த அரைகுறை பணி குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஏப்., மாதம் முதல் இன்று வரை பழுதடைந்த சாலை சீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ஜீரோவாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் அவசர பணிகளுக்கு டெண்டர் கோரப்படாமல் பணி மேற்கொள்ளப்படும் வழக்கத்திற்கு தற்போதைய அரசு தடை போட்டுள்ளது.
நெஞ்சாலைத் துறையில் காஞ்சிபுரம் மாவட்ட கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த பதவிகளுக்கான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட பின் சாலைகள் சீரமைப்பு குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.