Lifestyle and human interest
வன ஊழியர்களின் பாதுகாப்புடன் ஏலக்காய் பறிக்கும் தொழிலாளர்கள் புலி காட்டில் அச்சத்துடன் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, புலி நடமாட்டம் உள்ள, கில்லுார் பகுதியில், ஏலக்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு வன ஊழியர்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
கூடலுார், மார்தோமாநகர் அருகே கடந்த, 26ம் தேதி அதிகாலை தாமஸ் என்பவரின் கொட்டகையில் இருந்த பசுமாட்டை புலி தாக்கி கொன்றது. தொடர்ந்து அந்த புலி கில்லுார் தனியார் எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டது.
27ம் தேதி புலி, அத்திபாலி சாலையை கடந்து சென்றது. இருசக்கர வாகனத்தில் வந்த சனீஸ் என்பவர், புலியிடமிருந்து நுாலிலையில் உயிர் தப்பினார்.
வனத்துறையினர் 'ட்ரோன்' கேமரா மூலம் இப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். அச்சமடைந்த மக்கள் புலியை பிடிக்க மக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, புலியை பிடிக்க கில்லுார் பகுதியில் வனத்துறையினர் இரண்டு கூண்டுகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். இப்பகுதியில் புலியின் நடமாட்டம் உள்ளதன் காரணமாக தனியார் எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், முதிர்ச்சியடைந்த ஏலக்காய் பறிக்க முடியாமல் வீணாகும் சூழல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க, வன ஊழியர்கள் பாதுகாப்புடன் தொழிலாளர்கள் ஏலக்காய் பறிக்கும்படி மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும், புலியை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகிறோம். மக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம்.
தனியார், தோட்டங்களில் ஏலக்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு வன ஊழியர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
ட்ரோன் கேமராவில் புலியின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.