Health
பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
திருமுருகன்பூண்டி: திருப்பூர் மாநகரப்பகுதி மட்டுமின்றி, அவிநாசி, பூண்டி நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில், நீர்வழித்தடங்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பையாக குவிந்து கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி, பாரதி நகர், மெயின் ரோடு, ராக்கியபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகிலுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்துக் கொண்டுள்ளதால், மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. அதேபோல், 8-வது வார்டு துரைசாமி நகர் மற்றும் ஏ.டி. காலனி வீதிகளில் உள்ள சாக்கடைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. பல நாட்களாக இவை சுத்தம் செய்யப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சமீபத்தில், நல்லாறு துார்வாரும் பணியின் போதும் நீர்வழித்தடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவியல் குவியலாகக் கண்டெடுக்கப்பட்டன.
சாலையோர புதர்கள் மற்றும் நீர்நிலைகளில், காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களை வீசுவது வாடிக்கையாக இருந்தது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பக் கொடுத்தால், 10 ரூபாய் வழங்கும் நடைமுறை வந்த பிறகு, கால்வாய்களில் மதுபாட்டில்களை வீசுவது பெருமளவு குறைந்துள்ளது.அதேபோன்று, பிளாஸ்டிக் கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களுக்கும் கூடுதலாக, 1 அல்லது 2 ரூபாய் கட்டணமாக வசூலித்துவிட்டு, பயன்படுத்திய பாட்டிலை கடைகளில் திரும்பத் தரும்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
பழைய நாளிதழ்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை எடைக்குப் போட்டு மக்கள் பணமாக்குவது போல, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் ஒரு தொகையைத் திரும்பப் பெறும் நடைமுறை வந்தால், பிளாஸ்டிக் கழிவுகள் கண்ட இடங்களில் வீசப்படுவது முற்றிலுமாகக் கட்டுப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.