Health
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
திருவள்ளூர்: திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நீர்வளத்துறை துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டோல்கேட், கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து, சி.வி.நாயுடு சாலை, தெற்கு குளக்கரை சாலை வழியாக, பழைய பேருந்து நிலையம் பின்புறம் நீர்வளத்துறை துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் செல்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இக்கால்வாய் வழியாக காக்களூர் ஏரிக்கு செல்லும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கால்வாயை முறையாக பராமரிக்காததால், சில இடங்களில் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கியுள்ளது.
மேலும், கால்வாயில் சி.வி.நாயுடு சாலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனால், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறாமல், கழிவுநீராக மாறி தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, கால்வாய் வழியாக, காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில், கால்வாயில் தண்ணீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதனால், குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
அடுத்த மாதம், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதற்குள் கால்வாயை துார்வாரி, கழிவுகளை அகற்ற நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.