Religion
வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 91 விநாயகர் சிலைகள் நேற்று இரவு காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி, வி.எச்.பி., சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மாலை ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கரூர் 80 அடி சாலையில் இருந்து, 23 விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்து சாலை, அரசு காலனி வழியாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.தொடர்ந்து இரவு, இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 23 சிலைகள் கரூர், 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு, முக்கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதை தவிர, பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகள், பொது அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் என, 91 விநாயகர் சிலைகள் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி, ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் கரூர், 80 அடி சாலை முதல் வாங்கல் காவிரியாறு வரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.