Politics
முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் இல்லம் அருகே புதிய தலைமைச் செயலகம்...?

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ளது. முதல்வர் விஜய் அறிவிப்பு. 25 ஏக்கர் நிலம் தேர்வு, 15 அடுக்குகள், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையையொட்டி புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் நிலையில் 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில் புதிய தலைமைச் செயலகத்துக்காக சென்னையின் முக்கியமான பகுதிகளில் 4 இடங்களை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகின. அதில் ஒன்று பட்டினப்பாக்கம்.
இதற்காக, சாந்தோம் பிரதான சாலையை ஒட்டி சுமார் 2 ஆயிரத்து 47 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், மயிலாப்பூர் பகுதிக்குட்பட்ட தனது 21.37 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த பொதுத்துறைக்கு வீட்டுவசதி வாரியம் சனிக்கிழமையன்று அனுமதி வழங்கியது. முன்னதாக, இங்கிருந்த ஆயிரத்து 380 எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களுக்கான பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
இதே போல், சாலை பயன்பாடு என வகைப்படுத்தப்பட்ட 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் அனுமதி அளித்துள்ளார். இதனுடன் வருவாய்த் துறையின் பிற நிலப் பகுதிகளையும் சேர்த்து புதிய தலைமைச் செயலக வளாகத்தின் பரப்பளவு 26.5 ஏக்கர் வரை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு அருகே கட்டப்படும் இந்த தலைமைச் செயலக கட்டடம், 15 அடுக்குகள் கொண்டதாகவும், 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலும் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
