Crime, law and justice
மாமியாரை கொலை செய்து நாடகமாடிய மருமகள் கைது
செங்கல்பட்டு: மாமியாரை கொலை செய்து நாடகமாடிய மருமகள் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு நகராட்சி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பெருந்தேவி, 60. இவரது மகன் வெங்கடேசன், 35. மருமகள் இந்துஜா, 28.
கடந்த 13ம் தேதி வீட்டில் பெருந்தேவி மற்றும் இந்துஜா இருந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியே வந்தபோது பெருந்தேவி வழுக்கி விழுந்ததாகவும், மூச்சுப்பேச்சின்றி கிடப்பதாகவும் கணவர் வெங்கடேசனுக்கும், ‘108’ ஆம்புலன்சுக்கும் இந்துஜா தகவல் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தபோது, பெருந்தேவி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பெருந்தேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில், கழுத்து எலும்பு உடைந்திருப்பதும்; இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்துஜாவை காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கழிப்பறையில் இருந்து வெளியே வந்தபோது, பெருந்தேவி கீழே விழுந்துள்ளார். இதற்கு இந்துஜா தான் காரணம் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இந்துஜா, பெருந்தேவியின் கழுத்தில் தாக்கியதில், அவர் இறந்தது தெரிய வந்தது.
இந்துஜாவை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.