Politics
நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதில் தாமதம்: தனியாரிடம் அடிமட்ட விலைக்கு விற்கும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையம் தொடங்காததால் தனியார் வியாபாரிகளிடம் மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல்மணிகளை விறகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் நவரை பருவத்தை தொடர்ந்து சொர்ணவாரி பட்டத்திற்கு கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணற்று பாசனம் மூலம், 13,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
இந்தப் பயிர்கள் அறுவடைக்கு தயாரானதை தொடர்ந்து ஒரு மாதமாக அறுவடை செய்யப்படுகிறது. சொர்ணவாரி பட்டத்திற்கு ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம்.
ஆனால், நடப்பாண்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்குவதில் அரசு தாமதித்து வருகிறது.
இதனால், அறுவடையான நெல்மணிகளை விவசாயிகள் கொள்முதல் நிலையம் இயக்க வேண்டிய பகுதிகளில் கொட்டி வைத்து விற்பனைக்கு காத்துள்ளனர்.
இதனிடையே, இரவு நேரத்தில் பெய்யும் மழையால் கரும்பாக்கம், களியப்பேட்டை, அரும்புலியூர், திருமுக்கூடல், பினாயூர், எஸ்.மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குவித்து வைத்துள்ள நெல்மணிகளை பாதுகாப்பதில் விவசாயிகள் தினமும் சிரமபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்காததால் களியப்பேட்டை, பினாயூர் ஆகிய பகுதிகளில் தனியார் வியபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, களியப்பேட்டை விவசாயிகள் கூறியதாவது, நடப்பாண்டு சொர்ணவாரி பட்ட சாகுபடி காலத்தில் கடும் வறட்சி நிலவியதால் கிணறுகளில் நீர் ஊற்றுகள் வற்றி பாசன பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், சாகுபடி நிலப்பரப்பில் பாதி அளவிற்கான பயிர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
இதனால், இந்த பருவத்திற்கு வழக்கத்தை காட்டிலும் குறைந்த அளவிலான விளைச்சல் ஏற்பட்டு அறுவடைக்கு முன்னதாகவே நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்காததால் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் தனியார் வியாபாரிகளிடம் மிக குறைந்த விலைக்கு நெல்மணிகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதாவது, அரசு கொள்முதல் நிலையத்தில் 82 கிலோ எடை கொண்ட சன்னரக நெல் ஒரு மூட்டை 2,100 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால் தனியார் வியாபாரிகள் 82 கிலோ எடையிலான நெல் மூட்டையை 1,600 ரூபாய்க்கு பெறுகின்றனர்.
இதனால், ஒரு மூட்டை நெல்லுக்கு 500 ரூபாய் குறைவாக கிடைப்பதால் சொர்ணவாரி பட்ட சாகுபடியில் பெருத்த நஷடம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நெல் கொள்முதல் தொடங்குவதில் இனியும் தாமதிக்காமல் விவசாயிகள் குவித்து வைத்து காத்திருக்கும் நெல்மணிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டு இடங்கள் குறித்த அதிகாரபூர்வ அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வு செய்துள்ள இடங்களில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டிற்கு வரும்' என்றார்.