Lifestyle and human interest
செலவுக்கு கூட பணமில்லை: பணிக்கு சென்ற கிராம மக்கள்

கூடலுார்: கூடலுார் அருகே, இருவரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியின் காரணமாக, 21 நாட்களாக வருமானம் இன்றி வீட்டில் முடங்கிய கிராம மக்கள், வேறு வழியின்றி பணிக்கு செல்ல துவங்கினர்.
கூடலுார் லாரஸ்டன் பகுதியில், 2 பேரை தாக்கி கொன்ற புலியை, பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, கிராமத்தை சேர்ந்த, 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள், 20 நாட்களாக பணிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். இவர்களுக்கு சில தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்கினர். எனினும், அவசர தேவைக்கு கூட பணம் இன்றி சிரமப்பட்டு வந்த மக்கள், அரசின் நிவாரண உதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர். எனினும் பயனில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று முதல், தனியார் எஸ்டேடில் பணிக்கு செல்ல துவங்கினர்.
கிராம மக்கள் கூறுகையில், ‘புலி மீண்டும் ஒருவரை தாக்கி கொல்வதை தவிர்க்க, வனத்துறையினர் அறிவுரைப்படி வேலைக்கு செல்லாமல் வீட்டில், 20 நாட்களாக வருவாய் இன்றி முடங்கி கிடக்கிறோம். அவசர தேவைக்கு கூட கையில் பணம் இல்லை. வெளியில பெற்ற கடனை செலுத்த முடியாமல் உள்ளோம். அரசு நிவாரண உதவியும் இல்லை. குடும்ப செலவுகளை ஈடு செய்ய, அச்சத்துடன் பணிக்கு செல்ல துவங்கி உள்ளோம்,’ என்றனர்.

