Politics
நம்பிக்கையில் முதல்வர், வீறுகொள்ளும் உதயநிதி, அசால்ட் எடப்பாடி... ரணகளமாகும் இடைத்தேர்தல்!

தொடக்கத்தில், இடைத்தேர்தலை தி.மு.க புறக்கணித்து, அ.தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது உண்மைதான்.
2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள். இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஏழு தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். ‘தேர்தல் நடத்தக் கூடாது’ என அ.தி.மு.க நீதிமன்றத்தை நாடியிருப்பதால் வழக்கு சிக்கல்கள் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த இரண்டு தொகுதிகளையும் த.வெ.க., தி.மு.க.,
அ.தி.மு.க மூன்று கட்சிகளும் ‘வாழ்வா... சாவா?’ பதற்றத்தோடுதான் எதிர்கொள்கின்றன. ஆளுக்கொரு கணக்கோடு களத்தில் குதித்திருக்கின்றன. இந்தச் சூழலில் இடைத்தேர்தலில் கழகங்களின் அரசியல் கணக்கு என்னவென்று களமிறங்கி விசாரித்தோம்.
``இது தன்மானப் பிரச்னை...’’ - வீறுகொண்ட உதயநிதி!
நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், “தொடக்கத்தில், இடைத்தேர்தலை தி.மு.க புறக்கணித்து, அ.தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறது தி.மு.க தலைமை. த.வெ.க-வுக்கான மாஸ் இன்னும் பொதுமக்கள் மத்தியில் குறையவில்லை. இந்தச் சூழலில் அ.தி.மு.க - தி.மு.க - த.வெ.க என மூவரும் களமிறங்கினால், வாக்குகள் பிரிந்து ஆளும் தரப்புக்குச் சாதகமாகப் போக அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கும் முனைப்புடன் அ.தி.மு.க-வுக்கு வழிவிட்டு, தி.மு.க இந்தத் தேர்தலை புறக்கணிப்பதுதான் த.வெ.க-வுக்கு எதிரான வியூகமாக இருக்க முடியும். இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க-வைத் தோற்கடித்தால் விஜய் மீதான பிம்பத்தை உடைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இந்த விவகாரங்களைக் கேட்டதும் கொந்தளித்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
`சட்டமன்றத்தில் தி.மு.க-வினர்மீது முதல்வர் விஜய் தனிப்பட்ட தாக்குதல் நடத்திவருகிறார். ‘அப்பாவைக் காணோம்’ என நம் கழகத் தலைவரைக் கிண்டல் செய்கிறார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவில்லை என வாய் கூசாமல் அவதூறு பரப்புகிறார். நாளைக்குத் தேர்தலை புறக்கணித்தால், `சட்டமன்றத்தில்தான் அப்பாவைக் காணோம் எனப் பார்த்தால் தேர்தல் களத்தில் அப்பாவின் கட்சியையே காணோம்’ எனச் சொல்ல மாட்டாரா..?’ என ஆவேசமாகப் பேசினாராம்.
அதோடு உதயநிதி நிற்கவில்லை. இரண்டு தொகுதிகளில் ஒன்றை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில்தான் தன் ஆதரவாளரான பரந்தாமனை வேட்பாளராக நிற்க வைத்திருக்கிறார். எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என இளைஞரணிக்கு உத்தரவு பறந்திருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஐந்து நாள்கள் பிரசாரம் செய்யவும் திட்டமிடுகிறார் உதயநிதி. சொல்லப்போனால், விஜய் பிம்பத்தை உடைப்பதை, தனது தன்மானப் பிரச்னையாகப் பார்க்கிறார் உதய்” என்றனர்.
தன்னம்பிக்கையில் விஜய்... அசால்ட் எடப்பாடி.. களத்தில் சீமான்!
நம்மிடம் பேசிய த.வெ.க அமைச்சர்கள் சிலர், “மூன்றரை மாத ஆட்சியை நிறைவு செய்திருக்கும் த.வெ.க-மீது எந்தவோர் அதிருப்தியும் இல்லை. மக்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நம்புகிறார் முதல்வர் விஜய். சட்டமன்றத்துக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவை, த.வெ.க-வுக்குக் கிடைக்கும் ஆதரவாகவே பார்க்கிறார் முதல்வர். தி.மு.க எந்த வியூகத்தையும் மேற்கொள்ளட்டும். முதல்வரின் இரண்டு நாள் பிரசாரத்தில் வென்றுவிடுவோம் நாங்கள். மெனக்கெடாமல் எங்களுக்கு வெற்றி கிட்டும். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்களுடன் இருப்பதால் மதுராந்தகத்தில் எளிதாக வெல்வோம். தாராபுரத்தில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன” என்றனர்.
களத்தில் அசால்ட்டாக இருப்பது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என நினைக்கிறார்கள் அந்தக் கட்சியின் சீனியர்கள். “2026 பொதுத் தேர்தலில் மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வேட்பாளர்களுக்கு எந்தவித செல்வாக்கும் கிடையாது. அ.தி.மு.க-வின் பலத்தாலேயே வென்றோம் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. ‘தாராபுரத்தில் நாம்தான் வெல்வோம், நம்பிக்கையாக இருங்கள்’ என ரொம்பவே அசால்ட்டாக இருக்கிறார். இடைத்தேர்தலுக்கு தி.மு.க தலைமை பெரும் தொகையைச் செலவிட முன்வந்திருக்கிறது. ஆனால், கட்சிக்கு வாழ்வா, சாவா நிலை ஏற்பட்டிருக்கும்போதும், வேட்பாளர் களையே தேர்தல் செலவுகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது மதுராந்தகத்தை வெல்ல முனைப்பு காட்டலாம். ஆனால், `நம் இலக்கு தாராபுரம்தான்’ என்ற சிக்னலை வெளிப்படுத்துகிறார். பா.ம.க-வை வைத்துக்கொண்டு மதுராந்தகத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது தவறான முடிவு. அதேபோல், சி.வி.சண்முகம் போன்றவர் களையும் அரவணைத்துப் பேசியிருக்க வேண்டும். இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பா.ஜ.க., புதிய நீதிக்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியிருக்கிறது அ.தி.மு.க டீம். இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அ.ம.மு.க தலைவர் டி.டி.வி. தினகரனும் அறிவித்திருக்கிறார். தி.மு.க தோற்றால்கூட, கூட்டணி இல்லை எனத் தப்பித்துக்கொள்வார்கள். நாங்கள் தோற்றால் காரணம்கூடச் சொல்ல முடியாது. இடைத்தேர்தலுக்கென பிரத்யேக வியூகங்களை எடப்பாடி அமைப்பதாகத் தெரியவில்லை” என்றனர்.
நம்மிடம் பேசிய நா.த.க சீனியர்கள், “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ‘நாம் கண்டிப்பாகப் போட்டியிட வேண்டுமா?’ என்ற கேள்வி நா.த.க சீனியர்கள் மத்தியில் நிலவிவருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் கட்சியே கலகலத்துப் போயிருக்கும் சூழலில் இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிட்டு, மறுசீரமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தலாம். பொதுத் தேர்தலின்போதே மதுராந்தகத்தில் 4,900 வாக்குகள்தான் பெற்றிருக்கிறோம். தாராபுரத்தில் 6,000 வாக்குகள் வாங்கியிருக் கிறோம். இடைத்தேர்தலில் அந்த வாக்குகளும் குறையலாம் என்ற பேச்சு கட்சிக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, குதிரைப் பேரத்தால் எம்.எல்.ஏ-வை இழந்திருக்கும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவோ அல்லது புறக்கணிக்கும் முடிவையோ எடுக்கலாம் என்பதே கட்சியினர் விருப்பம். த.வெ.க-வை சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள் நா.த.க-வின் பிரபல நிர்வாகிகள்.
இந்தச் சூழலில் களத்தில் த.வெ.க-வை எதிர்க்கவும் வீழ்த்தவும் சரியாக வியூகத்துடன் செல்ல வேண்டும். இடைத்தேர்தலுக்கான செலவுகளும் மிகப்பெரியது. வியூகமும் பணமும் இல்லாமல் வெறுமனே கடமைக்குப் போட்டியிட்டு, சொற்ப வாக்குகளைப் பெற்றால் அது கட்சிக்குப் பெரும் பின்னடைவைத் தரும்” என்றனர்.
சீமானுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். “நா.த.க-வுக்கு என்ன பின்னடைவு வந்தாலும் சரி, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுதியாக இருக்கிறார் அண்ணன் சீமான். முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள், அமைச்சர்களின் பேச்சு, கட்சிக்காரர்களின் அட்ராசிட்டிகளை கவனிக்கும் அண்ணன், த.வெ.க எனும் சமூகக் குப்பையை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். எனவே, இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி த.வெ.க-வைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவிருக்கிறார். எங்களால் வெல்ல முடியாது. ஆனால், த.வெ.க-வுக்கு விழுகிற 5,000 வாக்குகளை எங்களால் தடுக்க முடியும்’’ என்றனர்.
எதிர்வரும் இடைத்தேர்தலைச் சாதாரண மாக கடந்துவிட முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். நம்மிடம் பேசியவர்கள், “107 இடங்களில் வென்ற போதிலும் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்,
4 கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் கட்சிகளில் தலா 2 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவில் ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய். மொத்தத்தில் 120 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வை ஆதரிக்கிறார்கள். நான்கு எம்.எல்.ஏ-க்களைக்கொண்டிருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் த.வெ.க-வைத் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்கள், அரசைக் கண்டித்துப் போராடவும் தொடங்கியிருக்கிறார்கள். இதே போக்கு நீடித்தால் ஆட்சிக்கான ஆதரவைத் திரும்பப் பெறும் சூழல் உருவாகலாம். எனவே, எதிர்வரும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றால்தான் 118 எண்ணிக் கையை எட்டிப்பிடிக்க முடியும். ஒருவேளை தோற்று, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவைத் திரும்பப் பெற்றால் ஆட்சியை அசைத்துப் பார்க்கும் சூழல் ஏற்படும். எனவேதான், மூன்று கட்சிகளும் மும்முரமாகக் களமாடி வருகின்றன” என்றனர்.
`இடைத்தேர்தலில் கட்சியை வெல்ல வைப்பது என்னுடைய பொறுப்பு’ என்று சவால்விட்டு கோதாவில் குதித்திருக்கிறார் உதய். அதேசமயம், `இடைத்தேர்தல் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் த.வெ.க-தான் வெல்லும்’ என்ற தீர்க்கமான நம்பிக்கையில் இருக்கிறார் விஜய்.
விஜய் - உதய் இடையிலான வார்த்தை மோதல்களும், ஈகோ யுத்தமும் இடைத்தேர்தல் களத்தில் எதிரொலிக்கவிருக்கின்றன. ‘நானும் இருக்கிறேன்’ என வண்டியைக் குறுக்கே விடுகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ரணமாகியிருக்கும் களத்தை வெல்லப் போவது யார்? பார்ப்போம்!
