Religion
17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் இன்று இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் செப்.20 வரை இலவச தரிசனம் செய்ய அனுமதி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (செப்.17) காலை நடக்கிறது. இன்று பரிவாரமூர்த்திகள் என்று அழைக்கப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைமுன்னிட்டு அனைத்து துறையினரும் முழு வீச்சில் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மீனாட்சி கோயில் கும்பாபி ஷேகம் 2009 ஏப்.8ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தாலும், சீரமைப்பு பணி தாமதமாக நடந்ததாலும் 17 ஆண்டுகள் கழித்து நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.
இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று கோயிலுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர்.
6500 போலீசார் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் ஒரே நேரத்தில் மேல்தளத்தில் இருந்து கீழே வருவதை தவிர்க்க பகுதி பகுதியாக விடப்பட உள்ளனர். இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து கோயிலில் இருந்து வெளியே பக்தர்கள் வருவதை கணக்கிட்டு நாளை காலை 10:00 மணி வரை சித்திரை வீதிகளில் 'பாஸ்' இல்லாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை அலைபேசியில் அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.
1600 துாய்மை பணியாளர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 86 திருப்பணிகள் ரூ.15.40 கோடி மதிப்பீட்டிலும், உபயதாரர்கள் மூலம் 100 திருப்பணிகள் ரூ.16.89 கோடி மதிப்பீட்டிலும் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் தினமும் சுழற்சி முறையில் குப்பையை அகற்ற 600 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தன்று துாய்மை பணிகளை மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து 1000 துாய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
24 நிரந்தர கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 28 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 203 குடிநீர் தொட்டிகள் கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் 'பளிச்'சென எரியும் வகையில் மாற்றப் பட்டுள்ளன. கீழவெளிவீதி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப் பட்டுள்ளது. 650 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 5 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
54 மருத்துவ மையங்கள் 27 இடங்களில் 54 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சிறப்பு முகாம்கள், கோயில் உட்புறத்தில் 6 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் சுற்றுப்புறத்தில் 5 மருத்துவ மையங்கள், 4 மையங்களில் உயிர் காக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 8 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 12 ஆம்புலன்ஸ்கள், பத்து '108' ஆம்புலன்ஸ்கள், 2 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.
மதுரை அரசு மருத்துவமனை சார்பில் செப்.16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மருத்துவமனை பழைய வளாகத்தின் 223வது வார்டில் 30 படுக்கைகளும் தீவிர விபத்து சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,) வளாகத்தில் 30 படுக்கைகளும், இரண்டு வி.ஐ.பி., அறைகளும் தயாராக உள்ளன. செப்.,17 அதிகாலை 4:00 முதல் காலை 10:00 மணி வரை ஏழு குழுக்களுடன் டாக்டர்கள், பிற பணியாளர்களுடன் தயார் நிலையில் இருப்பர்.
மற்றொரு எமர்ஜென்சி குழுவினர் மருத்துவமனையில் மாற்றுப்பணிக்கு தயாராக இருக்க ஏற்பாடு செய்துள்ளோம். செப்.18 இரவு 10:00 மணி வரை மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருப்பர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் மருத்துவமனை வரவேற்பறை இணைந்து செயல்படும். கும்பாபிஷேகத்தின் போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக மருத்துவமனை ரிசப்ஷன் குழுவினர் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.