Religion
கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,322 விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைள் வைத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் 122 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் பூஜைகள் நடந்தது.
பிரதிஷ்டை செய்து 3வது நாளான நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தனி, தனி வாகனங்களில் புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு மந்தைவெளிக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் நடந்த பூஜைகளுக்கு மாவட்ட ஒருங்கிணை்ப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மதன், அருண் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினர்.
மந்தைவெளியிலிருந்து நேற்று மதியம் 2:00 மணிக்கு புறப்பட்ட விசர்ஜன ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று, மீண்டும் மந்தைவெளியை வந்தடைந்து, அங்கிருந்து விநாயகர் சிலைகள் கச்சிராயபாளையம் கோமுகி அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, சிறப்பு பூஜை செய்து சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி எஸ்.பி., ஷஹ்னாஸ் மேற்பார்வையில், டி.எஸ்.பி., கலையரசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று நடந்தது.