Politics
“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை… நேராக தாராபுரம் செல்வேன்; இடைத் தேர்தலில் திமுக வெற்றி..” – அன்பில் மகேஷ்

"18ஆம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லியுள்ளனர். கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவேன்." என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், “18ஆம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லியுள்ளனர். ஆஜராகிவிட்டு, நேராக இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் தாராபுரம் செல்வேன். கண்டிப்பாக தாராபுரத்தில் வெற்றியை நிலைநாட்டுவோம். இந்தச் சோதனைக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியும். காலம் வரும்போது பதிலைக் கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்று தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் பண மோசடி செய்த வழக்கில் அரசகுமார் உள்ளிட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்களின் 49 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை DPI வளாகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைபேசிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கின் 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை. கல்வித்துறைத் தொடர்பாக நான் வைத்திருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து 18ஆம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லியுள்ளனர். கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவேன். சோதனைக்கு வந்த அதிகாரிகள், ‘இதுவரை நாங்கள் சோதனை நடத்தியவர்கள் யாரும் உங்களைப் போல் ஒத்துழைப்புக் கொடுத்ததில்லை’ எனத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
சட்டமன்றத்தில் பேசினால் தான் அடுத்த நிமிடமே வீட்டில் ரெய்டு செய்கிறார்கள் என்றால், மக்கள் மன்றத்தில் பேசினாலும் ரெய்டு செய்கிறார்கள். நான் மக்கள் மன்றத்தில் ‘ஹிட்லர்’ என்றேன். புதியத் தலைமைச் செயலகம் குறித்து பதிவிட்டேன். திணிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்றேன். தொடர்ந்து மடைமாற்றும் வேலையைத்தான் செய்கிறார்கள்.
18ஆம் தேதி அவர்கள் சொல்லும் நேரத்தில் அங்கு ஆஜராகிவிட்டு, நேராக இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் தாராபுரம் செல்வேன். கண்டிப்பாக தாராபுரத்தில் வெற்றியை நிலைநாட்டுவோம். இந்தச் சோதனைக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியும். காலம் வரும்போது பதிலைக் கொடுப்போம். என்ன பொய் வழக்குப் போட்டாலும் நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.
காவல்துறைதான் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை மக்களிடத்தில் சொல்ல வேண்டும். எனவே தயவு செய்து முறையாக விசாரணை நடத்துங்கள். எந்த ஆதாரமும் இல்லை என்றப்பின், ‘நீங்க டார்கெட் கிடையாது.. அவர்தான் டார்கெட். எனவே அவர் பெயரைச் சொல்லுங்களே; உங்களை விட்டுவிடுகிறோம்’ என்பதுபோன்றதை செய்ய வேண்டாம். நீதியை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும் அதனை காவல்துறை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
