Religion
காவிரி ஆற்றில் 690 விநாயகர் சிலைகள் கரைப்பு

மேட்டூர்:விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், மேட்டூர் அணை சென்றாய பெருமாள் கோவில் நீர்பரப்பு பகுதி, திப்பம்பட்டி, கூணாண்டியூர் நீர்பரப்பு பகுதிகளில், நேற்று முன்தினம், 475 விநாயகர் சிலைகளை, பக்தர்கள் லாரி, வேன்களில் கொண்டு வந்து கரைத்தனர்.
தொடர்ந்து, 2ம் நாளாக நேற்று, மேட்டூர் காவிரியாற்றின் மட்டம் பகுதியில், 158; அணை சென்றாய பெருமாள் கோவில் நீர்பரப்பு பகுதியில், 8; திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதியில், 78, கூணான்டியூர் நீர்பரப்பு பகுதியில், 141 என, 385 சிலைகளை பக்தர்கள் கொண்டு வந்து கரைத்தனர். இரு நாட்களில் மட்டும், 860 விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துள்ளனர்.அதேபோல் நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில், 160 சிலைகள்; பூலாம்பட்டி காவிரி ஆறு, குப்பனுார், கூடக்கல் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில், 145 சிலைகள் கரைக்கப்பட்டன. சேலத்தில் நேற்று, 100க்கும் மேற்பட்ட சிலைகளை வேனில் ஏற்றிக்கொண்டு, நண்பர்கள் புடைசூழ, கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு எடுத்து வந்தனர். அங்கு பிரத்யோக படகில் வைத்து, ஆழமான பகுதிக்கு எடுத்துச்சென்று, சிலைகளை கரைத்தனர். இன்று ஆயிரக்கணக்கான சிலைகளை, மூக்கனேரியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து வருவர். அதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, 10:00 மணி வரை, சிலைகளை கரைக்க வருவர் என்பதால், மின் விளக்குகள், ஒலி பெருக்கி, தீயணைப்பு படை என, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஏற்காடில் வைக்கப்பட்டிருந்த, 30 விநாயகர் சிலைகள், படகு இல்ல ஏரியில் இன்று கரைக்கப்பட உள்ளன. பரோட்டா மாஸ்டர் மாயம்சீரகாபாடியை சேர்ந்தவர் தமிழரசன், 27. கொண்டலாம்பட்டியில் உள்ள ஹோட்டலில், பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். சதுர்த்திக்கு சீரகாபாடியில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை கரைக்க, நேற்று தமிழரசன், அவரது உறவினர்கள், நண்பர்கள், கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைக்க எடுத்துச்சென்றனர். அங்கு மாலை, 6:00 மணிக்கு குளித்த தமிழரசன் மூழ்கி மாயமானார். தேவூர் போலீசார், உள்ளூர் நபர்களை வைத்து தேடினர். இடைப்பாடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரவு நேரமானதால், தேடுதல் பணியை இன்று தொடர்கின்றனர் என, போலீசார் தெரிவித்தனர்.