Religion
விநாயகர் சதுர்த்தி; 2,380 சிலை பிரதிஷ்டை

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நகரில் 780 சிலைகள், புறநகரில் 1,600 சிலைகள் என்று 2,380 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
3 அடி முதல் 11 அடி வரையிலான பிரம்மாண்ட சிலைகள் பொது இடங்களிலும், நகரின் முக்கிய சந்திப்புகளிலும் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.
சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. ராஜவீதி தேர்நிலை திடலில் உயரமான, 11 அடி உயர ராஜவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் ரத்தினபுரி இரட்டை பைப் மைதானத்தில், கஜமுக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுந்தராபுரம் அண்ணா காலனி வீர விநாயகர் கோயிலில் 8 அடி உயரத்துக்கு வீரவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
வெள்ளலூர் சாலை சாமண்ணா நகரில், உலகக் கோப்பை கால்பந்துகளோடு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தார். ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலையில் சிவசேனா சார்பிலும், சின்னவேடம்பட்டியில் பாரத்சேனா சார்பிலும், சிங்காநல்லுார் மற்றும் வி.கே.கே.மேனன் சாலையில் விஷ்வஹிந்து பரிஷத் சார்பிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
நேற்று இரவு முத்தண்ணன் குளத்திலும், குறிச்சி குளத்திலும், சிங்காநல்லுார் குளத்திலும் இந்து அமைப்புகள் சார்பில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இன்றும் விசர்ஜனம் நடக்கிறது.
தொண்டாமுத்தூரில் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் -16, ஹிந்து முன்னணி -10, பா.ஜ. -2, சக்திசேனா -1, அகில பாரத மக்கள் கட்சி- 1, ஹிந்து மக்கள் கட்சி- 2 என மொத்தம், 32 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஹிந்து முன்னணி 21 சிலைகளும், விஷ்வ ஹிந்து பரிஷத் -2, பொதுமக்கள்- 24 என மொத்தம் 47 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு- 6, ஹிந்து முன்னணி 18, பா.ஜ.2, ஹிந்து மக்கள் கட்சி -1, பொதுமக்கள்- 17 என, மொத்தம் 44 சிலைகளும்; காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வன விநாயகர் சதுர்த்தி குழு- 6, பொதுமக்கள்- 6, ஹிந்து முன்னணி -2 என, மொத்தம் 14 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஹிந்து முன்னணி- 17, பா.ஜ. -2, பொதுமக்கள் -29 என மொத்தம், 48 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வைக்கப்பட்டுள்ள, 185 விநாயகர் சிலைகளும், நாளை விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.