Religion
மழலையர்களின் கிருஷ்ண ஜெயந்தி... மதங்களை கடந்து ஒன்றிணைந்த குழந்தைகள்

திருநெல்வேலியை சேர்ந்த ஆசிரியை லோகநாயகி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு மதங்களை சேர்ந்த குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அலங்கரித்து விழா கொண்டாடினார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியை லோகநாயகி, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு மதங்களைச் சேர்ந்த குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அலங்கரித்து விழாவைக் கொண்டாடியுள்ளார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்த அவரது செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான லோகநாயகி, தனியார் மழலையர் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழகுபடுத்துவதில் தனி ஆர்வம் கொண்ட இவர், கடந்த ஆண்டு முதல் தனது வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டும் தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரின் ஆதரவுடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார். இதில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர். பெற்றோர்களும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழகாக அலங்கரித்து விழாவில் பங்கேற்கச் செய்தனர்.
இதுகுறித்து ஆசிரியை லோகநாயகி கூறுகையில், "இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் ஒன்றிணைந்து பங்கேற்றனர். குறிப்பாக கிறிஸ்தவ குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சிறப்புப் பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, இந்த விழாவிலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் எந்தவித வேறுபாடுமின்றி ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கேக் வெட்டி விழாவைக் கொண்டாடினோம். இந்த ஆண்டு குழந்தைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். கிருஷ்ணருக்குப் பிடித்ததாகக் கருதப்படும் வெண்ணெய், நாவல் பழம், கொய்யாப்பழம், அவல் உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் தட்டை, முறுக்கு, சீடை போன்ற பாரம்பரிய தின்பண்டங்களும் படைக்கப்பட்டன. அவற்றைக் குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தோம்.
விழாவில் பங்கேற்ற மழலையர் முதல் பெரிய வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினோம். பென்சில், பொம்மைகள், கார்கள், சாவிக்கொத்துகள், கிரயான்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினோம்.
இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கு எனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து குழந்தைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக விழாவைக் கொண்டாடுவது மனநிறைவை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் என்பதால், தொடர்ந்து இதுபோன்ற கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.
