Politics
காஞ்சிபுரத்தில் 246 மையங்களில் காலை சத்துணவு திட்டம் விரிவாக்கம்
காஞ்சிபுரம், செப். 11– காஞ்சிபுரத்தில் காலை சத்துணவு திட்டம், 246 மையங்களில் விரிவுபடுத்தும் பணிக்கு, இன்று
காஞ்சிபுரத்தில் காலை சத்துணவு திட்டம், 246 மையங்களில் விரிவுபடுத்தும் பணிக்கு, இன்று சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்துார், மாங்காடு ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில், 537 பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை, காலை சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் இருந்து, நடுநிலைப் பள்ளிகள் வரையில் படிக்கும் மாணவ – மாணவியருக்கு காலை சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, 130 நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 116 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என, 246 பள்ளிகளில், காலை சத்துணவு திட்டம் இன்று முதல் சோதனை ஓட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளன.
இதன் மூலமாக, 26,040 மாணவ–மாணவியர் பயன்பெறுவார்கள் என, துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஒருவர் கூறியதாவது:
ஐந்தாம் வகுப்பு வரையில், 537 பள்ளிகளில் காலை சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வருப்பு வரை உள்ள 130 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 116 மேல்நிலைப் பள்ளிகள் என, 246 பள்ளிகளில் காலை சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்ட உள்ளது.
இதன் சோதனை ஓட்டம் இன்று தொடங்குகிறது. ‘முதல்வர்’ திட்டம் தொடங்கி வைத்த பின், முழுமையாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.