Politics
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; சொந்த நிதியில் ஏற்பாடு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவு?

கடலூரில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. சொந்த நிதியில் ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி.
கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 618 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலட்சுமி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சமையல் கூடம், உணவு அருந்தும் இடம், சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை செய்து, உரிய ஆதாரங்களுடன் இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நிதியில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சுற்றறிக்கையால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருட்களுக்கு அரசு நிதி ஒதுக்காமல், பள்ளி தலைமை ஆசிரியர்களின் சொந்த நிதியில் ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்துவது முறையற்றது என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தேர்தல் அரசியலை கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான நிதியை முறையாக ஒதுக்காமல் அரசு ஊழியர்களிடம் செலவினத்தை ஏற்கச் செய்வதாகவும் சிலர் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
