Politics
மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய சுற்றறிக்கை : தமிழக அரசு விளக்கம்!

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது தொடர்பாகக் கடலூர் மாவட்டத்தில் உள்ள 618 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காகப் பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தல், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்களுக்கான சாப்பாட்டுத் தட்டுகள் மற்றும் டம்ளர்கள் வாங்குதல் வேண்டும்.
அதோடு 4 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட இரும்புச் சட்டத்திலான புதிய பெயர்ப்பலகைகளை அமைத்தல் போன்ற பணிகளைத் தலைமை ஆசிரியர்கள் தங்களின் சொந்தப் பொறுப்பில் செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளது.
இது சார்ந்து 09.09.2026 அன்று முதன்மைக் கல்வி அலுவலரால் உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக, கவனக்குறைவாகச் செயல்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென 03.09.2026 அன்று மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)