Crime, law and justice
பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்புவதற்கு எதிர்ப்பு: நடவடிக்கைக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

கடந்த சில நாட்களாக இதுவரை இல்லாத வகையில் முல்லைப் பெரியாறு அணை குறித்த தவறான தகவல்களை கேரளாவில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது.
அணை உடைவது போன்ற கிராபிக் காட்சிகளையும், அணை உடைந்து அதனால் கேரளா முழுவதும் அழியும் என்ற பீதியையும் கேரள மக்களிடம் பரப்பி அச்சுறுத்தும் பணியில் யுடியூபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாது அணை குறித்து எதுவும் முழுமையாக அறியாத இளம் தலைமுறையினர் கூட ரீல்ஸ் எடுத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அணை குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேரளாவில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு சமிதி' கோரிக்கை விடுத்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்த எந்த புரிதலும் இல்லாத பலர் கேரளாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்காத பட்சத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற சர்ச்சைகள், பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் உள்ளது.
அதனால் தமிழக அரசு தலையிட்டு இது தொடர்பான புகாரை போலீசில் பதிவு செய்ய வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மீண்டும் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் ரஞ்சித்குமார், செயலாளர், ஐந்து மாவட்ட விவசாய சங்கம்: பலமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை பலவீனம் அடைந்து விட்டதாக பொய்யான புகார்களை கேரள தரப்பில் கூறியதால் அணையை பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நீர் மூழ்கி வீரர்கள் மூலம் அணையின் அடிப்பகுதி வரை சென்று பல கட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபுணர் குழுக்கள் அணையின் பலம் குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஆர்.ஓ.வி. மூலம் தண்ணீரில் மூழ்கியுள்ள அணைப்பகுதியை ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 999 ஆண்டுகள் பலமாக இருக்கும் என ஒப்பந்தம் போடப்பட்ட அணை உடைந்து விடுவதாக பொய்யான தகவல்களை கேரளா தரப்பில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் 2011ல் தேனி மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மீண்டும் நடக்கும் நிலை உருவாகும்.
