Crime, law and justice
முல்லைப் பெரியாறு அணையில் 3 நாட்கள் நடந்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் ஆய்வு நிறைவு விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளதாக குழுத்தலைவர் தகவல்
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 3 நாட்கள் ஆய்வு நேற்று நிறைவடைந்தது.
''முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையான அணையாக இருப்பதால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறித்து எங்களுக்குள் மேலும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது,'' என, குழுவின் தலைவர் பல்ராஜ் ஜோஷி தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் அணை பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழு தலைவர் பால்ராஜ் ஜோஷி தலைமையில் செப்., 1ல் அணைப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 2வது நாளான செப்., 2ல் தேக்கடியில் தனியார் ஓட்டலில் இரு தரப்பு அதிகாரியுடன் இணைந்து ஆய்வு குறித்து அனைத்து விபரங்களையும் பதிவு செய்தனர்.
3வது நாளான நேற்று நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ரகசியமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
நேற்று 3 நாள் ஆய்வை முடித்தபின் தலைவர் பால்ராஜ் ஜோஷி கூறியதாவது :
தேசிய அணை பாதுகாப்பு ஆணையமான என்.டி.எஸ்.ஏ., (National Dam Safety Authority) உத்தரவின்படி அணையில் கள ஆய்வு மேற்கொண்டோம். 2021ல் அணை பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிபுணர்கள் குழுவால் விரிவான முறையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த இந்தக் குழுவில் புவியியல், நில அதிர்வியல், கருவியியல், நீர்மின் இயந்திரவியல், நீரியல் ஆய்வுகள் மற்றும் அணை வடிவமைப்பு பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்கள் இதில் ஈடுபட்டனர்.
அணையின் நிலைத்தன்மை, பாதுகாப்பு அம்சங்கள், செயல்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழக நீர்வளத்துறையினர் ஏற்பாட்டின் கீழ் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக மதுரை மண்டல தலைமை பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அணை ஆய்வின் போது நேரடியாக பார்வையிட்டு பல முக்கியமான தகவல்களை பதிவு செய்துள்ளோம். இரு மாநில அதிகாரிகளுடனும் கலந்துரையாடலும் நடந்தது. விரிவான மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான சில தகவல்களையும் சேகரித்துள்ளோம். அணை மிகவும் பழமையானதாக இருப்பதால் சேகரிக்கப்பட்ட தகவல் குறித்து எங்களுக்குள் மேலும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அந்த ஆலோசனைகளுக்குப் பிறகு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பிப்போம் என்றார்.
