Arts, culture, entertainment and media
ராங்கால்! தமிழக முதல்வரை எச்சரித்த கர்நாடக முதல்வர்!

"ஹலோ தலைவரே, முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாள ரென்றும், வருங்கால பிரதம ரென்றும் த.வெ.க. அமைச்சர் கள் கட்டமைக்கும் விவகாரத்தை காங்கிரஸ் தலைமை ரசிக்காததால், த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணி உறவில் விரிசல் அதிகரித்திருக்கின்றது.''”
"ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளரா ஏற்காவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகு வோம் என எச்சரித்தார் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார். இதற்கெல்லாம் பயப்படமாட்டேன் என விஜய் சொன்ன நிலையில், மாணிக் கம் தாகூரும், ப்ரவீன் சக்கரவர்த்தியும் விஜய் யை சந்தித்து சமா தானப்படுத்தியதா தகவல் வந்துச்சே...''”
"அது நிஜம் தான். ஆனா அதோட விவகாரம் முடியலை. விஜய்யின் சமீபகால போக்கு களை அறிந்து, கர்நாடக முதல்வர் சிவக்குமார் கோபப் பட்டிருக்கிறார். ராகுல் காந்தியைத் தொடர்பு கொண்டு, காங்கிரஸுக்கும் உங்களுக்கும் எதிரா இருக்கும் விஜய்யிடம் எதற்காக சமாதானம் பேசவேண்டும்? அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் எனச் சொல்லிய சிவக்குமார், விஜய்க்கு உடனடி யாக ஒரு தகவலை அனுப்பியுள்ளார். உங்களின் நம்பிக்கைக்குரியவர்களை என்னைச் சந்திக்க அனுப்புங்கள். சில விசயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென முதல்வர் விஜய்க்கு தகவல் தந்திருக் கிறார். இதனையடுத்து, தனது நம்பிக்கைக்குரிய இருவரை பெங்களூருக்கு அனுப்பிவைத்துள்ளார் விஜய். இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர்கள் இருவரும் சிவக்குமாரைச் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், "விஜய்யும் நீங்களும் காங்கிரஸைப் பத்தி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் பூச்சாண்டி காட்டுவதாக நினைக்கிறீர்களா? எதற்கு ராகுல்காந்தியை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஒரு மணி நேரத்தில் உங்கள் முதல்வரை தெருவுக்கு கொண்டுவந்துவிட முடியும். உங்களுக்கு கொடுக்கும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கிக்கொள்ளும். கம்யூனிஸ்டுகளையும் வாபஸ் வாங்கவைப்போம். ஆனா, இதெல்லாம் புரியாம, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கிறோம்ங்கிற யோசனைகூட இல்லாம, காங்கிரஸையும் ராகுலையும் சிறுமைப்படுத்துறீங்க. இதெல்லாம் உங்களுக்கு நல்லதில்லை. உங்க முதல்வரை யோசிக்கச் சொல்லுங்க'’என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்துள்ளாராம் முதல்வர் சிவக்குமார்.''
புகைப்பட ஊழல்!
"அரசு அலுலகங்கள்ல முதல்வரோட புகைப் படம் வைக்கிற விஷயத்துல தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கணிசமா ஆதாயம் பார்த்துட்டதா சொல்றாங்களே?''”
"இந்தத் தேர்தலில் புதிய அரசு பதவியேற்றதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் புகைப்படங்கள் விநியோகிக்கப்பட்டது. இதற்கான புகைப்படத்தின் மென்பிரதி மின்னஞ்சல்வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் அனுப்பிவிட்டதாக அறிவித்தது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை. இப்படியிருக்க, ரூ 300 மதிப்புள்ள புகைப்படத்தை ரூபாய் 800.75-க்கு வாங்கியிருக்கின்றது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளும். அரசு சார்பில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 5000-க்கும் அதிகமான அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. 38 மாவட்டங்கள், 43 துறைகள், 5000 அலுவலகங்கள் எனக் கணக்கிட்டாலும் 81,70,000- அலுவலகங் கள் இயங்கிவருகின்றன. தோராயமா ரூ.500 கூடுதல் விலையென்றாலும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையினர் எவ்வளவு காசை ஆட்டையைப் போட்டிருப்பார்கள் என மற்ற துறையினர் வாயைப் பிளக்கிறார்களாம்.''
நீதிமன்றம் வைத்த குட்டு!
"மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு அழைப்பிதழில் பெயர் விடுபட்ட விவகாரத்துல நீதிமன்றம் த.வெ.க. அரசுக்கு குட்டு வைச்சிருக்கு போலிருக்கே?''”
"மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழா வுக்கு அச்சடித்த பத்திரிகையில் மீனாட்சியம்மன் கோவில் அறங் காவலர் குழுவின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றும், அறங்காவலர் குழுவின் சட்டப்பூர்வமான செயல்பாட்டிற்குப் தடையிருக்கக்கூடாது என்றும் திருக்கோயிலின் மதச்சார்பற்ற மற்றும் நிர்வாக விவகாரங்கள், நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு தொடர்பில், மனுதாரர் மற்றும் பதவியிலிருக்கும் பிற அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றுவதில் சட்டவிரோதமாகத் தலையிடுவதோ, விலக்கிவைப்பதோ செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கினைத் தொடர்ந்தார் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி. வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ‘பெயர் விடுபட்டது தவறு. அதேநேரத்தில் குடமுழுக்கு முடிந்தபின் கோவிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம்பெறவேண்டும்’ என உத்தரவிட்டவர், தொடர்ந்து“"கோவில் என்பது மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம். இங்கு அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது வருந்தத்தக்க செயல். வருங்காலங்களில் மதவழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் இல்லாமல் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்யவேண்டும்' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.''”
"சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதத் தில், அ.தி.மு.க.வின் தளவாய் சுந்தரம் த.வெ.க.வுக்கு ஆதரவா கோதாவில் குதிச்சாராமே?’''’
"புதன்கிழமையன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத் தில், கச்சத்தீவு விவகாரம் குறித்து த.வெ.க.வுக்கு ஆதர வாக நீதிமன்ற ஆதாரம் ஒன்றைக் காட்டினார் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான தளவாய் சுந்தரம். ஆதாரத் தைக் காட்டிய கையோடு அதனை அமைச்சர் ராஜ் மோகனிடம் வழங்கினார். இதற்கு நேரு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். "எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் தளவாய்சுந்தரம். த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு என்ற நிலையில்தான் அ.தி.மு.க.வே இரண்டானது. இப்பொழுது த.வெ.க. வுக்கு ஆதரவாக தளவாய்சுந்தரம் குரல் கொடுக்கிறார். இது பழனிச்சாமியின் தூண்டுத லாலா? அல்லது தளவாய்சுந்தரமும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறாரா?' என்கிற கேள்வி யெழுந்துள்ளது.''
ஆய்வா… பரிகாரமா?
"புழல் சிறைச்சாலை வளாகத்தில் முதல்வர் விஜய் மேற்கொண்டது ஆய்வா?, பரிகாரமா என சர்ச்சை ஓடுதே?''”
"ஆமாம் தலைவரே, காதுல விழற தகவலைப் பார்க்கும்போது கேட்கிறவங்க சந்தேகத்துலயும் நியாயம் இல்லாமலில்லை. புழல் சிறைச்சாலை வளாகத்தில் தமிழக முதல்வர் விஜய் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டார். வெளிப்படைத் தன்மை, நிர்வாகச் சீர்திருத்தத்துக்கான ஆய்வு என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், விஜய்யின் ஜாதகப் படி, தற்போதைய கிரக நிலைகளின் அடிப்படையில் சதய நட்சத்திரத்தின் தாக்கம் அவரது ராசிக்கு பெரும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் உருவாக்கும் என நெருக்கமான ஜோதிடர்கள் கணித்துக் கூறியுள்ளார்களாம். இந்த ஆண்டில் பெய்யப்போகும் கனமழையால் த.வெ.க. அரசுக்கு பெரும் நிர்வாகச் சிக்கல்களும், அரசியல்ரீதியான நெருக்கடிகளும் ஏற்படும் என்றும் ஜோதிடக் குழு எச்சரித்ததாம். இந்த தோஷங்கள், ஆபத்துகளி லிருந்து தப்பிக்கவேண்டுமானால், சிறைவளாகத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து அங்கு தயார்செய்யப்படும் உணவைச் சாப்பிடவேண்டும் என பரிகாரம் கூறியுள்ளனர். அந்தத் தோஷநிவர்த்திக்காகவே, எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென புழல் சிறைக்குச் சென்ற விஜய், ஆய்வு என்ற பெயரில் பரிகாரத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார் என்கிறார்கள் விவரம்தெரிந்தவர்கள்.''’
ஐ.பி.செந்தில்குமாரின் ட்வீட்!
"திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமாரின் திடீர் எக்ஸ்தள பதிவு உடன்பிறப்புகளை விழியுயர வைச்சிருக்கே?''”
"ஆமாம் தலைவரே, தி.மு.க.விலிருந்த 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாக உயர்த்தப் போவதா அறிவித்தார் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின். இதில் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது திண்டுக்கல். அறிவிப்பு வெளியான அரைமணி நேரத்திலேயே, ‘திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட திண்டுக்கல், ஆத்தூர், நிலக் கோட்டை, பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்குட் பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனை வருக்கும், இதுவரை உங்கள் உடன்பிறந்தவனாக எண்ணி எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு என்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன்’ எனப் பதிவிட்டார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான ஐ.பி. செந்தில்குமார். எதற்காகவாம்? ஏற்கனவே மூன்று முறை மா.செ.வாக இருந்துவிட்டார். மீண்டும் வாய்ப்பில்லை. எனினும், தங்களது குடும்பம் வலுவாகவுள்ள ஆத்தூர் நிலக்கோட்டை தொகுதிகள் தங்கள் வசமிருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் அது மத்திய தொகுதியில் வருகிறது. இருப்பினும் தங்களது ஆதங்கத்தை பதிவுசெய்து வைப்போம் என எண்ணி பதிவிட்டிருக்கலாம் என்கின்றனர் விவரமறிந்த திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினர்.''’
தொழிற்சங்கப் பதவிகளுக்கு வசூல்!
"புதிதாக த.வெ.க. அமைத்துவரும் தொழிற் சங்க பதவிகளுக்காக, ஆர்வம் காட்டுபவர்களிடம் வசூலில் இறங்கியிருக்காமே த.வெ.க.?''”
"நிஜம்தான் தலைவரே, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தில் நீண்ட காலம் பணியாற்றிய கமலக்கண்ணன் த.வெ.க.வில் இணைய, அவர் மூலமாக வலுவான ஒரு தொழிற்சங்கத்தினை கட்டமைத்துவருகிறது த.வெ.க. தலைமை. இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், உடன்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட அனைத்து மின்நிலையங்களிலும், மின்சார வாரியத்திலும் த.வெ.க.வுக்கான தொழிற்சங்கக் கிளைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு கிளைக்கழகத்திலும் ஒரு தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர், துணைத் தலைவர் பதவிகள் இடம்பெறும். இதற்காக தலைக்கு ரூ.20,000 கொடுக்கவேண்டுமென தலைமைக் கழகத்திலிருந்து கிருஷ்ணன் பெயரைக் கொண்ட ஒருவர் வசூல் செய்துவருகிறார். இந்த ஆட்சியில் லஞ்சமில்லை என்கின்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். ஆனால் கட்சியில் தொழிற்சங்கப் பதவிக்கே லஞ்சம் கேட்கிறார்கள் என உடன்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.''’
டி.ஆர்.பாலு இன்! துரைமுருகன் அவுட்!
"தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியி லிருந்து துரைமுருகனை மாத்திட்டு டி.ஆர். பாலுவை நியமிக்கப்போறதா காதில விழுதே?''”
"தி.மு.க. கட்சியில் அமைப்புரீதியாக பல மாற்றங்களை அண்மையில் அமல்படுத்தி யிருக்கிறார் ஸ்டாலின். பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ள ஸ்டாலின், மாநில அமைப்புகளிலும் சீர்திருத்தங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து துரைமுருகன் கழட்டிவிடப்படவிருக்கிறார். புதிய பொதுச்செய லாளராக டி.ஆர்.பாலு, பொருளாளராக உதயநிதி, செயல்தலைவராக கனிமொழி என நியமிக்க ஸ்டாலின் ஆலோ சிப்பதாக சொல் கின்றன அறிவாலய வட்டாரங்கள். இப்போதெல்லாம், கட்சிசார்ந்து அல்லது அரசியல்சார்ந்து எந்த ஒரு விசயமாக இருந் தாலும் அத்தையிடம் (கனிமொழி) பேசி விட்டுச் சொல்கிறேன் என்கிறாராம் உதயநிதி.''”
ஒழிந்ததா லஞ்சம்?
"அமைச்சர் கீர்த்தனா, சட்டமன்றத்தில் பட்டாசுத் தொழிலில் தற்போது லஞ்சம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதா பெருமை பேசியிருக்கிறாரே?''”
"அதுக்கு அங்கேயே முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சுடச்சுட பதிலடி கொடுத்தார். இது ஒருபக்கமிருக்க, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி, சிவகாசியை அடுத்துள்ள நமஸ்கரித் தான்பட்டியிலுள்ள கிருஷ்ணா பைரோடெக்னிக்ஸ் பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான வேதிப்பொருட்களை கலவை செய்வதற் காக வெளிமாநிலத்திலிருந்து புதிதாக ஒரு இயந்திரம் வாங்கி பொருத்திக் கொண்டிருந்தபோது, வேதிப்பொருள் கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரண மாக விபத்து ஏற்பட்டது. இதில் பொறியாளர் அகமது இப்ராஹிம், போர்மென் பாலமுருகன் ஆகிய இருவர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து, திருத்தங்கல் காவல் நிலையம் 4 சட்டப் பிரிவுகளின்கீழ் பட்டாசு ஆலை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் வீரமணி மீது வழக்குப் பதிவுசெய்தது. 20 நாட்களாகியும் இருவரும் கைது செய்யப்படவில்லை. காரணம், திருத்தங்கல் காவல் நிலைய அதிகாரிக்கு ரூ.5 லட்சம் கொடுத்துவிட்ட தாகவும், அதனாலேயே மேலாளர் வீரமணி காவல்துறையின் கண்ணெதிரே தலைமறைவாக இருப்பதாகவும், தானும் உள்ளூரிலேயே உலாவிக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆலையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தனக்கு நெருக்க மானவர்களிடம் தம்பட்டம் அடித்துவருகிறார்.''”
வெறுப்பில் மக்கள்!
"த.வெ.க. தொண்டர்களும் சரி, தலைவர் களும் சரி தீராத விளையாட்டுப் பிள்ளையா இருக்காங்களே?''”
"ஆமாம் தலைவரே, ஒருபுறம் வரலாற்றி லேயே முதல்முறையாக மேட்டூர் அணை இப்போதுதான் திறக்கப்படுகிறது என விஜய் ரசிகர்களும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பேசி வேடிக்கை காட்டுகின்றனர். மற்றொருபுறம், ஜூன் 12-ல் திறக்கப்பட்டிருக்க வேண்டிய மேட்டூர் அணை 3 மாதங்கள் கழித்து திறக்கப்படு கிறது. அதிலும் 150 நாட்கள் தேவைப்படும் சம்பா சாகு படிக்கு வெறும் 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப் படும் என்று அரசு அறி வித்திருப்பது விவசாயி களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியிலதான் இப்படின்னா, சட்டமன்றத்திலும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘10-க்கு 10 நாங்கள் ஜெயிச்ச மாவட்டம்’ எனத் தவறாகக் கூறினார். ‘திருத்தணியில் தோற்று விட்டீர்கள், 10-க்கு 9 தான்’ என எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதற்கு, "அ.தி.மு.க. ஜெயித்திருந்தால் என்ன, அதுவும் நம்ம கட்சிதானே' என சட்டமன்றத்தி லேயே கூறி, சபாநாயகரைப் பார்த்துக் கண்ணடித் தார். காமராஜர் மறைந்தபோது மெரினாவில் இடம்தர தி.மு.க. அரசு மறுத்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் வாட்ஸப் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்ட, அன்றைய மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம் நாயுடுவின் சட்டமன்ற வரலாற்றுப் பதிவை வாசித்துக் காட்டி தங்கம் தென்னரசு, வரலாற்று உண்மையைப் பதிவுசெய்தார். மொத்தத்தில் சட்டமன்ற அவை யிலும் சரி, வெளியிலும் சரி த.வெ.க.வினரிடம் பொறுப்புணர்வு இல்லாதது மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்திவருகிறது.''”
""சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் த.வெ.க.வுக்குத் தாவிய அ.தி.முக.வினரை இடது கையில் டீல் செய்த த.வெ.க.வினருக்கு இசக்கி சுப்பையா அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார். கட்சியில் சேர்ந்தது முதலே தன்னைக் கண்டு கொள்ளவில்லை என கடுப்பில் இருந்தார் அவர். அதனாலேயே திடீரென தனது ராஜினாமா கடிதத் தை திரும்பப் பெறுவதாக மீண்டும் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு கொடுத்தாராம். இதையடுத்து இறங்கிவந்த தலைமை, அவரைக் கூப்பிட்டு என்ன விஷயமென கேட்க, விஜய்யைச் சந்திக்கவேண்டு மெனவும், கட்சி மாறி வந்த தன்னை அலைக் கழிக்காமல் முக்கியப் பொறுப்பு ஏதாவது கொடுக்க வேண்டும் என சில கோரிக் கைகளை அடுக்கியிருக் கிறார். அவரது கோரிக் கைகள் நிச்சயம் பரிசீலிக் கப்படும் என த.வெ.க. தலைமை உறுதியளித்த நிலையில் தன் முடிவை மாற்றிக்கொண்டிருக் கிறாராம் இசக்கி சுப்பையா.''”
இறுதிச்சுற்று!
அ.தி.மு.க. மாஜி அமைச்சர் மகன் படுகொலை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வெங்கடாசலம் கடந்த 2010ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் ஒரு மனைவியின் மகன் ராஜபாண்டியன் அ.தி.மு.க.வில் ஜெ. பேரவை யில் பொறுப்பு வகிக்கிறார். அவரது தம்பி ராஜராஜன் விவசாய வேலை செய்துவருகிறார். இருவருக்கு மிடையே சொத்துப்பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்த நிலையில் ராஜராஜன் குடியிருந்த வீட்டை ராஜபாண்டியன் பூட்டிவிட்டு பிரச்சனை செய்ததால், கடந்த சில மாதங்களாக அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தவர், வீட்டைத் திறக்க 2 மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார், ஆனால் காவல் நிலையத்திலிருந்து வீட்டுச் சாவியைப் பெற அலையவிட்டுள்ளனர். ஒருவழியாக கடந்த புதன்கிழமை போலீசாரிடம் சாவியைப் பெற்றவர், ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழனன்று வீட்டைத்திறந்து சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அங்கு அரிவாளோடு வந்த ராஜபாண்டியன், ராஜராஜனை ஓடஓட விரட்டி வெட்டிக் கொலைசெய்தார். பலமுறை புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த படுகொலையென்று குற்றம்சாட்டிய உறவினர்கள், பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)