Politics
முதல்வர் விஜய் குறித்த பேச்சு- சேகர்பாபு மீது வழக்கு பதிவு

அண்மையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்யின் பதிலுரையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் பேசியதும், அவர் காட்டிய சைகையும் கடும் கண்டங்களை பெற்று வந்தது. இதனை கண்டித்தும் மக்கள் விரோதப் போக்குகள், தேர்தல் வாக்குறுதி ஏமாற்றங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து திமுக தலைமை கடந்த சில நாட்களாக மாநிலம் தழுவிய பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 12 ஆம் தேதி சென்னை மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தற்போதைய தவெக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ஜெகதீஸ்வரி என்ற தவெக நிர்வாகி புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் அனுமதியின்றிப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டம் கூட்டியது, போக்குவரத்திற்கு முட்டுக்கட்டை போட்டது மற்றும் முதலமைச்சரின் பிம்பத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பி.கே.சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)