தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் 70 வார்டுகளில் 700 பணியாளர்கள் களம்
தாம்பரம்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியின் 70 வார்டுகளிலும் 700 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தேங்கிய நீர், பயனற்ற டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தேங்கிய நீர் உள்ளிட்ட 4,500க்கும் மேற்பட்ட கொசு உற்பத்தி ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தேங்கிய நீரில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு, தொட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதிக பாதிப்புள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், பள்ளிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் தினமும் வாகனம் மற்றும் கையடக்க புகைபோக்கி இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்படுகிறது. சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு காய்ச்சல் முகாம்களும் நடத்தப்படுகின்றன.
காலி மனைகள், புதர் மண்டிய இடங்கள், பூட்டிய வீடுகள், மொட்டை மாடிகள், பால்கனிகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் தேங்கும் நீரை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்து, அதற்கான செலவு உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். தொற்று நோய் பரவலைத் தடுக்க பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.