Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் ரூ.1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட புனித ஜாா்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. ராணுவ கட்டிப்பாட்டில் உள்ள அப்பகுதியில்தான் சட்டப்பேரவை அலுவலகமும் உள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்புத் துறைக்கு குத்தகைத் தொகையை தமிழக அரசு செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் அண்மையில் வெளியிட்டாா்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம், நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் என 3 இடங்கள் அரசின் பரிசீலனையில் இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் சாந்தோம் பிரதான சாலையிலிருந்து அணுகு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டு, அதில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலக கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ளது. இது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடமாகும். இதற்கான முதல்கட்ட அனுமதியை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கட்டடக் கலை நிபுணா்கள் கொண்ட ஆலோசனைக் குழு, கட்டட வடிவமைப்பு, வரைபடம் தயாரிக்க குழுக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்துக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.