Crime, law and justice
நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கான இடங்களைத் தேர்வு செய்து கண்டறியுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினு இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று (17.09.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதில் என்ன சிக்கல் உள்ளது. மொழி சார்ந்த விஷயங்களில் தமிழக அரசின் மனநிலை மாற வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா, “தமிழக அரசுக்கு எந்தவிதமான மனநிலை பிரச்சனையும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கல்விக் கொள்கை உள்ளது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடாது. நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது மாநில அரசின் கொள்கைக்கும், மாநில சட்டத்துக்கும் முரணானது. மத்திய அரசின் திட்டங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல், கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள விவகாரம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “மொழிப் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உரையாடல் தேவை” என குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில், “ஏற்கனவே எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்காக மத்திய அரசின் பங்காக வழங்க வேண்டிய ரூ.5,000 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதற்கு எதிராக ஏற்கனவே தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நவோதயா பள்ளிகள் என்பது சட்டத்தின் அடிப்படையிலான கட்டாயத் திட்டம் அல்ல; அது ஒரு கொள்கை என்பதால், அதை மறுக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் தமிழ் கற்றல் சார்ந்த சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், நவோதயா பள்ளி கொள்கையை ஏற்க முடியாது.
மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவ உத்தரவிட்டால், அது தவறான முன்னுதாரணத்தையும், எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கிவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக நிலங்களை கண்டறிய உத்தரவிட்ட முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற முடியாது. இந்த உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. டெல்லியை தமிழ்நாடு அந்நியமாகப் பார்க்கக் கூடாது.
அதேபோல் தமிழ்நாட்டையும் டெல்லி அந்நியமாகப் பார்க்கக் கூடாது. நவோதயா பள்ளிகளைத் தொடங்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டது என்ற புரிதல் ஏற்படக்கூடாது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஆரோக்கியமான உரையாடல் அவசியம்” என நீதிபதிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)