Politics
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கட்டணம் பெறக்கூடாது: கூடுதல் தலைமை செயலர் அமுதா

உத்திரமேரூர்:'நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் எவ்விதக் கட்டணமும் பெறக்கூடாது' என, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா தெரிவித்தார். வேடபாளையம் பகுதிகளில், உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், கூடுதல் தலைமைச் செயலர் அமுதா நேற்று முன்தினம் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல்மணிகளை விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய மாவட்டம் முழுதும் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் வட்டம், வேடபாளையம், வாலாஜாபாத் வட்டம், வேடல் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து, நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்களிடம் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்யவும், மழை காலங்களில் நெல்மணிகள் நனையாமல் முறையாக மூடி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் விவசாயிகளுடன் இணைந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறக் கூடாது. உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும். நெல் வியாபாரிகள் தலையீடு அறவே கொள்முதல் நிலையங்களில் இருக்கக் கூடாது. விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் பெறக் கூடாது.
அதேபோல, விவசாயிகளின் அடங்கல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர் கையொப்பம் பெற்ற பின்னரே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இதில், தவறு நிகழக்கூடாது.
வருவாய், வேளாண்மை துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இதை முறையாக கண்காணித்து தவறு இல்லாத வகையில், செயல்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். இதில், புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் நோக்கம் விவசாயிகள் நேரடியாக பயனடைய வேண்டும்.
எனவே, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டையும், சான்றிதழ் வழங்கும் பணியையும் முறையாக ஆய்வு செய்து விவசாயிகள் பயனடையும் வகையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அமுதா கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா, சப் - கலெக்டர் புவனேஷ்ராம், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகானந்தம், வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி உட்பட பலர் உடனிருந்தனர்.