பைக் மீது டிப்பர் லாரி மோதி இளம்பெண் பலி; தோழி காயம்
பல்லாவரம்: பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், ஜமுனா, 23 என்பவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி, அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருவாரூரைச் சேர்ந்தவர் ஜமுனா. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா, 22. நர்ஸிங் படிப்பை முடித்த ஜமுனா, வேலை தேடி சென்னை வந்துள்ளார். குரோம்பேட்டை, சாஸ்திரி காலனி பகுதியில், தோழி ஸ்ரீஜாவுடன் தங்கியிருந்தார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஹீரோ ஸ்ப்பெளண்டர் பைக்கில் குரோம்பேட்டை அருகே, அணுகு சாலையில் இருந்து பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலத்தில் ஏற முயன்றனர்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற டிப்பர் லாரி, இவர்களது பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே, ஜமுனா பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டிய ஸ்ரீஜா, அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, ஜமுனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த ஸ்ரீஜா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தாம்பரம் கடப்பேரியைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
