பைக் மீதி லாரி மோதல் மதுரை வாலிபர் பலி
திருவள்ளூர்: திருவள்ளூரில், நேற்று இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், 31 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரே, நேற்று காலை 10:30 மணியளவில், பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ‘பல்சர்’ பைக் மீது, லாரி மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீசார், சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், இறந்த நபர், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 31, என்பது தெரிந்தது. இவர், காக்களூரில் தங்கி, தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று காலை, இருசக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.