Politics
மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் போராட்டம்... வாபஸ்!:அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சில் உடன்பாடு

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 16 நாட்களாக துாய்மை பணியாளர்கள் நடத்தி வந்த போராட்டம், அமைச்சர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நேற்று, வாபஸ் பெறப்பட்டுள்ளது. உணவுக்கு பதிலாக உணவுப்படி வழங்கப்பட உள்ளது. துாய்மை பணியாளர் மீதான வழங்குகள் திரும்ப பெறப்படும் என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு, சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று, 16வது நாளாக ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடந்தது.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆகியோர், காலை 11:30 மணிக்கு, துாய்மை பணியாளர்களுடன் பேசினர்.
அப்போது, 'புதிய ஆட்சி தொடங்கி மூன்று மாதங்கள் தான் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியாளர்கள், கஜானாவை காலிசெய்துவிட்டு சென்றுள்ளனர். உங்கள் பிரச்னைகளைத் தீர்க்க, அவகாசம் வேண்டும்.
வீட்டிற்கு செல்லுங்கள்; உங்கள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்' என, அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
பின், மதியம் 12:00 மணிக்கு சமரச பேச்சு தொடங்கியது. உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மற்றும் சில நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் தொடங்கிய சமரசப் பேச்சு, மதியம் 2:30 மணிக்கு முடிந்தது. இதில், உடன்பாடு ஏற்பட்டது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், எந்த இடையூறுமின்றி, 16 நாட்களாக துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, சாதாரண விஷயம் அல்ல. இதற்கான ஆணை தயாராகிறது.
குளியலறை, ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். அதற்காகவே, ஒரு மாத காலம் அவகாசம்.
பணியாளர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வருகின்றன என்பது தெரியவே, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூட்டம், இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உணவுபடி வழங்கினால், 'அம்மா' உணவகத்தில் சாப்பிட்டு, மீத பணத்தை குழந்தையின் படிப்பு செலவு அல்லது மற்ற செலவுக்கு பயன்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவ்வாறு நினைப்பது தவறில்லை. அதற்காகவே, உணவுபடி வழங்கப்பட்டது.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிர்வாக சிக்கல் உள்ளதே தவிர, சட்ட சிக்கல் கிடையாது. துாய்மை பணியாளர்களை, முதல்வர் நிச்சயம் சந்திப்பார்.
அவர்கள் விடுத்த கோரிக்கை பட்டியலில், 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி அளித்த பேட்டி:
சமரச பேச்சின் போது, கூடுதலாக பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதன்படி, பணியின் போது இறந்தால் துாய்மை பணியாளர் நல வாரியம் மூலம் இழப்பீடு தொகை வழங்குவது, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் குறைதீர் கூட்டத்தை, இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்துவது எனவும் முடிவாகி உள்ளது.
குப்பை சேகரிக்க தேவையான 300 வாகனங்களில், முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள், 160 வாகனங்கள் வழங்குவதாக கூறியுள்ளனர்.
பணியாளர்களுக்கு தேவையான கையுறை, வாரத்திற்கு ஒரு முறையும், ஒரு நாளைக்கு இரு முககவசம் உள்ளிட்ட உபகரணங்கள், 'ரெயின் கோட்' ஆகியவையும் வழங்கப்பட உள்ளன.
சென்னை கலெக்டர் அறிவித்தபடி, 832 ரூபாய் ஊதியம், பணி நிரந்தரம், முதல்வர் சந்திப்பு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து, அக்., 3ல் நடக்கும் இரண்டாம் கட்ட பேச்சில் முடிவு செய்யப்படும். அதுவரை, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


