Politics
அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள்; தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பாரதி கூறியதாவது; “பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டோம். நான்கு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
உணவுப்படி ஒரு நாளில் 50 ரூபாய் உள்ளது. அதை அடுத்த மாதம் முதல் உணவுப்படியாக தருவதாக கூறி உள்ளனர். கடந்த காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 4,7,8-ல் புதிய வாகனங்கள் வழங்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்தில் புதிய வாகனம் கொடுப்பதாக கூறி உள்ளனர். இறந்தவர்களுக்கான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனவும், ரெயின் கோட் மற்றும் கை கவசம் உள்ளிட்டவை தருவதாகவும், மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறி உள்ளனர்.
இரண்டாவது கூட்டம் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நல்ல செய்தி வரும் என அமைச்சர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சர் அவர்களை சந்திக்க வைப்பதாக கூறி உள்ளனர். அதனால் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

