Crime, law and justice
‘தாய்மாமன்’ தங்க மோதிரங்களை பாதுகாக்க மகப்பேறு மருத்துவமனைகளில் ‘லாக்கர்’ வசதி
சென்னை: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில், மோதிரங்களை பாதுகாக்க, அந்தந்த அரசு மருத்துவமனைகளில் லாக்கர் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப மருத்துவ நிலையங்களில், ஜூன் 22ம் தேதிக்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம், வரும் 25ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர், திருவல்லிக்கேணி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் ஆகிய பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில், ஜூன் 22 முதல், செப்., 24ம் தேதி வரை, 12,500 குழந்தைகள் பிறப்பு என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களிலும், மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இதன்படி, சென்னையில் மொத்தம் 20,000 குழந்தைகளுக்கு, மோதிரம் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டம் தொடங்கும் தேதியில் 200 பேருக்கும், பின் தினம் 25 முதல் 50 பயனாளிகளுக்கும், மோதிரம் வழங்கப்படும்.
மோசடி, குளறுபடிகளை தவிர்க்க, ஒவ்வொரு மோதிரத்திலும், ஒரு எண் குறிப்பிடப்படும். அந்த எண்ணை மையமாக வைத்து, ஆணவங்கள், உண்மை தன்மையை ஆராய்ந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
மோதிரம் வழங்கும்போது, மோதிரத்தில் உள்ள எண்ணும், பயனாளிகளுக்கு வழங்கிய எண்ணும் ஒன்றுபோல் இருக்கும் வகையில், ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
குழந்தை பிறந்த பின், தாய் இறந்தாலோ அல்லது நோய் பாதிப்பு தீவிர சிகிச்சையில் இருந்தாலோ, கணவர் அல்லது தம்பதியின் பெற்றோரிடம் தீவிர விசாரணைக்கு பின், மோதிரம் வழங்கப்படும்.
பயனாளிகள், மோதிரம் வாங்க வரும்போது, அவர்கள் தான் என உறுதி செய்ய, மண்டலங்களில் உள்ள நிரந்தர பணி செவிலியர்கள், அந்தந்த மகப்பேறு மருத்துவமனையில் இருக்க வேண்டும். தற்காலிக பணியாளர்கள் இத்திட்டத்தின் முதன்மை பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.
மோதிரங்களை பாதுகாக்க, அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் தலைமை அதிகாரி அறையில், லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், மோதிரங்கள் பாதுகாக்கும் இடம், பயனாளிகளுக்கு வழங்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.