சாலையில் வரிசை கட்டி நிற்கும் பஸ்கள்

பேருந்து நிலையம் இன்றி தவிக்கும் கோவளம், மானாமதி ஊராட்சி மக்கள் சாலையில் பஸ்கள் வரிசை கட்டுவதால் தினமும் 'டிராபிக் ஜாம்'
திருப்போரூர்: பேருந்து நிலையம் இல்லாததால், கோவளம், மானாமதி ஊராட்சி சாலைகளில், பேருந்துகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பஸ்களில் மக்கள் ஏற முடியாத சூழலும் நிலவுகிறது.
கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை- மாமல்லபுரம் இடையே கோவளம் ஊராட்சி உள்ளது. இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளத்திற்கு வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளுக்கு, சென்னை, கிளாம்பாக்கம், தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், இங்கு பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் .
மானாமதி அதேபோல், திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சிக்கு உட்பட்ட ஆமையம்பட்டு, சந்தனாம்பட்டு, பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் 5,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, அரசின் இரண்டு மேல்நிலைப் பள்ளிகள், காவல் நிலையம், வங்கிகள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
மானாமதியில் இருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மானாமதியில் பேருந்து நிலையம் இல்லாததால், அங்கு வரும் பேருந்துகள் சாலையோரம் நின்று, பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றன.
மேலும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் நேரடி கவனம் செலுத்தி, பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.