பேருந்து நிலையம் இல்லாததால் மானாமதியில் பயணியர் அவதி
திருப்போரூர், செப். 17– மானாமதி ஊராட்சியில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணியர் கடும் அவதியடைந்து
மானாமதி ஊராட்சியில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சிக்கு உட்பட்ட ஆமையம்பட்டு, சந்தனாம்பட்டு, பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வணிக கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். பல்வேறு தேவைகளுக்கும் சுற்று வட்டார கிராம மக்கள் மானாமதிக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல் மானாமதியில் இருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
மானாமதியில் பேருந்து நிலையம் இல்லாததால், அங்கு வரும் பேருந்துகள் சாலையோரம் நின்று பயணியரை ஏற்றி இறக்கி
செல்கின்றன. மேலும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை- மாமல்லபுரம் இடையே கோவளம் ஊராட்சி உள்ளது.
இங்கு கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளத்திற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு, சென்னை, கிளாம்பாக்கம், தாம்பரம், அடையாறு, தி.நகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கும், பேருந்து நிலையம் இல்லாததால், மாநகர பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் நேரடி கவனம் செலுத்தி, பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.