Politics
மிஸ்டர் கழுகு: அட்ராசிட்டி மா.செ! - வசூலுக்குத் துணைபோகும் மாண்புமிகு?

பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேட்பாளர்களை அறிவிப்பதுதான் அண்ணா தி.மு.க-வின் வழக்கமான பாணி.
தூங்கா நகரின் `குன்று' தொகுதியைத் தன்வசம் வைத்திருக்கும் த.வெ.க மாவட்டச் செயலாளர் ஓவராக ஆட்டம்போடுகிறாராம். இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற `பவர்' மாண்புமிகுவும், இவரும் படு நெருக்கமாக இருக்கிறார்கள். மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிக்கு மாண்புமிகுவை அழைக்க வேண்டுமெனில், மாவட்டப் புள்ளியைச் சந்தித்து அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் மாண்புமிகுவே நிகழ்ச்சிக்கு வருவாராம். அதேபோல் தொகுதிக்குள் நடக்கும் எல்லா வேலைகளிலும் தனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட வேண்டுமென அடாவடி வசூலில் ஈடுபட்டுவருபவர், தொகுதியைச் சுற்றியுள்ள குவாரிகளிலிருந்து மாதா மாதம் அன்பளிப்புகள் வர வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறார். மாவட்டப்புள்ளி நிற்கவேண்டிய தொகுதியை, தான் பறித்துக்கொண்டதால், மாண்புமிகுவும் மாவட்டப்புள்ளியின் அடாவடிகளைப் பெரிதாக கண்டு கொள்வதில்லையாம். `நம்மால் மாண்புமிகு ஆக முடியவில்லையே...’ எனக் கடுப்பில் இருக்கும் லவ் மற்றும் கோல்டு பிரமுகர்கள் இவர்களின் அட்ராசிட்டிகளைப் போட்டுக்கொடுத்து வருகிறார்களாம்.
கொந்தளிப்பில் த.வெ.க நிர்வாகிகள்!
அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சுகன்யா தொழில் முறை வழக்கறிஞர், நீண்டகால தி.மு.க குடும்பப் பாரம்பர்யம்கொண்டவர். அதனால், அவருக்கு எதிர்ப்புகள் பெரிய அளவில் எழவில்லையாம். ஆனால், த.வெ.க வேட்பாளர் விவகாரம்தான் எரிமலையாய் வெடிக்கச் செய்திருக்கிறதாம். ``கையில் வைத்த மை காய்வதற்குள் தொகுதி மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டுச் சென்ற சத்தியபாமா மீண்டும் வரட்டும், பார்த்துக் கொள்கிறோம்'' என்று காத்துக் கிடந்த எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் அனைவரும் இந்த அறிவிப்பால் குஷியில் இருக்கிறார்களாம். அதேவேளையில், ``ராஜினாமா செய்துவிட்டுப்போன சத்தியபாமாவுக்கு நாம் வாய்ப்பு கொடுத்தால், `ஓட்டுப் போடுங்கள்’ என யார் வாசலிலும் நாம் போய் நிற்க முடியாது எனப் பலமுறை அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லியும், `எழுத்துபூர்வமாகப் போடப்பட்ட பழைய மே மாத டீலிங். மீறவே முடியாது' எனச் சொல்லி டீலிங் அடிப்படையில் சத்திய பாமாவை வேட்பாளராக அறிவித்திருப்பதால் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம் த.வெ.க நிர்வாகிகள்.
ஆட்டம்போடும் அறநிலையத்துறை அதிகாரி... கண்டுகொள்ளாத ஆட்சி மேலிடம்!
கடலோர மாவட்ட குறிஞ்சிப் பகுதியின் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி, கடந்த 10 ஆண்டுகளாக ஒரே சீட்டில் அமர்ந்துகொண்டு லட்டுகளை மூட்டைக்கணக்கில் வசூலிக்கிறாராம். இவரது கட்டுப்பாட்டில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் வருவதால், கோயில் திருப்பணிகள் தொடங்கி பூசாரிகள், ஊழியர்கள் நியமனம் வரை அனைத்திலும் வசூலில் சக்கை போடு போடுகிறாராம். கோயில் திருப்பணிகளுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்படும் தொகையை அப்படியே அமுக்கிக்கொண்டு, பொதுமக்களையே வசூல் செய்து நடத்திக்கொள்ளச் சொல்கிறா ராம். அந்த வசூல்களை அமைச்சரின் பெயரிலேயே போடுவதால், நடுங்கிக் கிடக்கிறார்களாம் சக அதிகாரிகள். அவற்றையும் மீறி தற்போது இவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றிருப்பதால், மேலிடத்தின் ஆதரவுடன் தீவிரமாகப் பணி மாறுதலுக்கு முயன்றுவருகிறாராம். துறை மாண்புமிகு ஒருபுறம் மீசை முறுக்கிக் கொண்டிருக்க, அதிகாரிகள் ஆட்டம் போடுவதால் `தூய சக்தி' என்பதெல்லாம் வெற்று வாய்ச் சவடால்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
வண்டல் மண்ணுக்கு கமிஷன்... வசூலில் த.வெ.க எம்.எல்.ஏ?
மஞ்சள் மாவட்டத்தின் எல்லையோரத்தில் உள்ள அணையில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மண் எடுக்க ஜே.சி.பி இல்லாத விவசாயிகள், ஒரு லோடுக்கு ஜே.சி.பி வாடகையாக ரூ.800 செலுத்தி மண் எடுத்துவருகின்றனர். இதற்கிடையே கடந்த ஒரு வார காலமாக, ஒரு லோடுக்குக் கூடுதலாக ரூ.600 செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி வருகிறார்களாம். இந்தத் தொகையை தாய்மொழி பெயர்கொண்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தரப்பு வசூலிக்கும் நிலையில், அவருடைய கட்சியினரும் அதிகாரிகளும் பங்கு போட்டுக்கொள்கிறார்களாம். ஆளும் தரப்பின் மிக மூத்த மாண்புமிகுவின் ஆதரவாளரான எம்.எல்.ஏ., `அதெல்லாம் மேலிடத்தில் உத்தரவு வாங்கித்தான் வசூலிக்கிறோம்...' என ஓப்பனாகப் பேசிவருவதால் விவசாயிகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். `வண்டல் மண் எடுக்க சீனியர் மாண்புமிகு அனுமதியளித்தாரா?' என மஞ்சள் மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி மாண்புமிகுவின் ஆதரவாளர் கிளப்பிவிட, சீனியர் மாண்புமிகுவின் ஆதரவாளர்களுக்கும், மகிழ்ச்சி மாண்புமிகு ஆதரவாளர்களுக்கும் இடையே புகைச்சல் கிளம்பியிருக்கிறது
``இப்பவும் கோட்டைவிட்டுடுவாரோ...'' - கலங்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
``பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேட்பாளர்களை அறிவிப்பதுதான் அண்ணா தி.மு.க-வின் வழக்கமான பாணி. ஆனால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தி.மு.க., த.வெ.க வேட்பாளர்களை அறிவித்து, அது ஊடகங்களில் செய்தியாக வலம் வந்த பிறகு எங்கள் பொதுச்செயலாளர், வேட்பாளர் களை அறிவிக்கிறார். இடைத்தேர்தலுக்குத் தேவையில்லாமல் விருப்ப மனுவெல்லாம் வாங்கிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை, எப்போதும் கட்சி பணம் செலவழித்து வெற்றிபெற வைப்பது வழக்கம். ஆனால், இப்போதும், வேட்பாளர்களையே தேர்தல் செலவுகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி யிருக்கிறார். அது மட்டுமல்ல, தாராபுரத்தில் எப்படியும் ஜெயித்துவிடலாம் என நம்புகிறார் அவர். சிக்கலாக இருக்கப்போவது மதுராந்தகம் என்றால், முதலில் பா.ம.க-வின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். சி.வி.சண்முகம் போன்றவர்களையும் அரவணைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் கடைசியாகத்தான் இந்த முயற்சிகளைச் செய்கிறார்'' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
