Crime, law and justice
கேரளாவில் லாரி மீது கார் மோதி விபத்து தமிழக மாணவர்கள் 8 பேர் பரிதாப பலி
திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், அதில் பயணித்த மாணவர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அருகில் உள்ள மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த வழியாக, நேற்று முன்தினம் இரவு 11:42 மணிக்கு குருவாயூரில் இருந்து கொடுங்கநல்லூர் நோக்கி தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று பயணித்தது.
அந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில், லாரியின் அடியில் சிக்கிய கார் அப்பளமாக நொறுங்கியது. சுக்குநூறாக நொறுங்கிய காரில் இருந்த எட்டு பேரையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், லாரியை முன்னோக்கி நகர்த்திய பின், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில், காரில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீட்கப்பட்ட இருவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இறந்தவர்கள், மதுரை மாவட்டம் பழைய விளாங்குடியை சேர்ந்த ஜோசுவா ஹில்சன், 20, அய்யன்கோட்டை அழகுமுத்துக்கோன் நகர் முரளிகிருஷ்ணன், 20, விரகனுார் பிரசன்னா, 20, திண்டுக்கல் மாவட்டம், வத்தலதொப்பம்பட்டி ஜீவா, 20, நல்லாம்பட்டி சூர்யா, 20, மதுரை மாவட்டம், மேலுார் நவினிப்பட்டி சந்தோஷ், 20, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பையை சேர்ந்த யுவசஞ்ஜித், 20, சேலம் மாவட்டம் புதுநல்லாகவுண்டம்பட்டி விஷ்வா, 20, என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்த நிலையில் அங்கு போதுமான வெளிச்சம் இல்லாததும் விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது-. பலியான மாணவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வளைவான பாதையில் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டது ஏன் என்றும், விபத்தில் சிக்கிய கார் டிரைவர் எங்கே என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான மாணவர் ஜீவாவின் உறவினர் கூறுகையில், ‘இறந்த சந்தோஷ், சமீபத்தில் புதிய கார் வாங்கினார். அதை கொண்டாட ஒருநாள் பயணமாக கொச்சி செல்ல நண்பர்கள் திட்டமிட்டனர். புதிய காருக்கு பதிவெண் இல்லாததால், அந்த காருக்கு பதிலாக மற்றொரு நண்பரின் புதிய காரை எடுத்துச் சென்றனர்’ என, கூறினார்.
மாணவர்கள் சுற்றுலா சென்ற தகவல் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. அனைவரும் மதுரையில் கூடி அங்கிருந்து கேரளாவிற்கு ஒரே காரில் கிளம்பிய அனைவரும், விபத்துக்கு முன் ஒன்றாக செல்பி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.
திருச்சூர் மாவட்ட கலெக்டர் ஷிகா, எஸ்.பி., முகமது நடிமுதின், உயரதிகாரிகள் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.