Crime, law and justice
கேரளாவில் லாரி-கார் மோதி பயங்கர விபத்து.. 8 தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் மரணம்!

கேரளா திருச்சூர் அருகே கைபமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை, குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி சென்ற கார் இரவு 11.40 மணிக்கு மோதியதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என கூறப்படும் எட்டு பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் சம்பவ இடத்திலேயே, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு, நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதாக சொல்லப்படுகிறது. தகவலின் படி குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார் கைபமங்கலம் பனம்பிக்குன்னு என்ற இடத்தில், அதே திசையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இரவு 11.40 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காரில் பயணித்த எட்டு பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 மாணவர்கள் உயிரிழந்தாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த கார் தமிழ்நாடு பதிவு எண்ணைக் கொண்டிருந்தாலும், உயிரிழந்த ஒரு மாணவரிடம் திண்டுக்கல் கல்லூரியின் அடையாள அட்டை இருந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
காவல்துறையினர் உயிரிழந்த 8 பேரின் அடையாளங்களையும் சரிபார்த்து வருவதுடன், விபத்திற்கான சூழ்நிலைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.