தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கி குவித்த குடும்பங்கள் தினமலர் - ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் திருவிழா கண்காட்சி நிறைவு

தாம்பரம்: 'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா ஏஜன்சிஸ் இணைந்து நடத்திய 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ - 2026' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நான்கு நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கி மகிழ்ந்தனர்.
தாம்பரம் ரயில்வே மைதானத்தில், கடந்த 11ம் தேதி தொடங்கிய கண்காட்சி, நேற்று நிறைவடைந்தது. 250க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட 'ஸ்டால்'களில், தமிழகத்தின் பிரபல நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பார்வையிட்டு, சலுகை விலையில் வாங்கினர். குழந்தைகளுக்காக வாட்டர் போட், செயற்கை நீர்வீழ்ச்சி, பலுான் ஷூட்டிங், ஒட்டகச் சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, 'ஆர்.சி.,' எனும் ரிமோட் கன்ட்ரோல் கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றவர்கள், மொத்தம் ஒரு லட்சம் பரிசுத்தொகையை வென்றனர். செயற்கை நீர்வீழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை குளித்து மகிழ்ந்தனர்.
'புட் கோர்ட்டில்' பல்வேறு உணவு வகைகளை வாங்கி ருசித்தனர். கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முடித்து, ஏராளமானோர் குடும்பத்துடன் சாரை சாரையாக வந்து பொருட்களை வாங்கினர்.
சென்னை மற்றும் புறநகர் மக்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி, மக்களின் அமோக வரவேற்புடன் நிறைவடைந்தது.
மகிழ்ச்சியாக இருந்தது கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அரங்கிலும் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து 'டெமோ' காண்பித்தது, கவரும் வகையில் இருந்தது. குடும்பத்தினருடன் வந்து மகிழ்ச்சியாக சுற்றிப்பார்த்தோம். - ஆன்டோ, 34, சேலையூர்
சிறுதானிய உணவு சூப்பர் கண்காட்சி உண்மையாகவே பயனுள்ளதாக இருந்தது. 'குளுகுளு' அறையில் அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசித்தோம். தேவையான பொருட்களை வாங்கினோம். ஆயுர்வேத பொருட்கள், சிறுதானிய உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வாங்கினோம். ஆண்டுதோறும் இதேபோல் கண்காட்சி நடத்த வேண்டும். - வித்யா, 38, தாம்பரம்
பாராட்டுக்குரியது ஒரேகூரையின் கீழ் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டதால், பொருட்களை எளிதாக தேர்வு செய்ய முடிந்தது. என் காலுக்கு 13 இன்ச் காலணி எளிதில் கிடைக்காது. ஆனால், இந்த கண்காட்சியில் கேட்டவுடனே கிடைத்தது. அதேபோல், பல வகையான காலணிகளும் இருந்தன. அரங்குகளை அமைத்திருந்தோர், பொதுமக்களை அன்பாக வரவேற்றது பாராட்டுக்குரியது. - சுதாகர், 45, ராஜகீழ்ப்பாக்கம்
வீட்டு தயாரிப்பு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தரமானவையாக இருந்தன. குறிப்பாக, வீட்டு தயாரிப்பு பொருட்கள் எங்களை கவர்ந்தன. ரயில்வே மைதானத்தில் கண்காட்சி என்று கேள்விப்பட்டதும், மழை, வெயிலில் திறந்தவெளியில் நடத்தப்படும் என நினைத்து வந்தோம். ஆனால், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்குள் செல்வதுபோல் 'ஏசி' அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. - கமலா ஹரி, 64, தாம்பரம்
நண்பர்களுடன் கண்காட்சியை சுற்றிப்பார்க்க வந்தோம். ஒவ்வொரு அரங்கிலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை எங்களுக்கு ருசி பார்க்க கொடுத்தனர். எத்தனை முறை கேட்டாலும் வழங்கினர். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றிப்பார்த்தோம். - யோகேஷ், 24, தாம்பரம்