Religion
17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம்... மீனாட்சி அம்மன் கோயிலில் முழுவீச்சில் ஏற்பாடுகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நாளை (செப்.17) நடைபெற உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நாளை (செப்.17) நடைபெற உள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாளில் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை முக்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதலில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு காலை 7.40 மணிக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் சன்னிதிக்கு 7.55 மணிக்கும், மூலவர் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு 8.10 மணிக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தை நேரில் காண சிறப்பு பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கான தரிசன ஏற்பாடுகள் தொடங்கும். காலை 10 மணிக்கு பிறகு பொதுத் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் தெற்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக கோயிலுக்குள் செல்லவும், கிழக்கு கோபுரம் வழியாக வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை நேரில் காண முடியாத பக்தர்களுக்காக மதுரை நகரின் முக்கிய பகுதிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் 51 LED திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் மற்றும் முகஅடையாள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.
குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
