Religion
மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,498 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம்

கடலுார்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,530 விநாயகர் சிலைகளில் நேற்று 1,498 சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.
ஹிந்துக்களின் முதன்மை பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, கடலுார் மாவட்டத்தில், 1,530 இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று இந்த பிரமாண்ட சிலைகள் லாரி, வேன்களில் ஊர்வலமாக கொண்டு சென்று, கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வடவாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலைகளை, தீயணைப்பு படையினர், நீச்சல் தெரிந்த போலீசார் மற்றும் மீனவர்கள் நீர்நிலைகளில் விஜர்சனம் செய்தனர்.
சிதம்பரம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 35 விநாயகர் சிலைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது. அண்ணாமலை நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பரங்கிபேட்டையில் 48 இடங்களில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு சென்று பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கடலில் விஜர்சனம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பண்ருட்டி: பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று விஜர்சனம் செய்ய படைவீட்டம்மன் கோவிலில் இருந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சிறப்பு வழிபாட்டுக்குப் பின் நேற்று ஊர்வலமாக கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்துமுன்னணி சார்பில் மார்க்கெட் கமிட்டியில் இருந்து துவங்கிய விஜர்சன ஊர்வலம் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நெல்லை கோட்ட தலைவர் மனோகர் துவக்கி வைத்தார். பஸ் நிலையம் எதிரில் விநாயகர் சிலைகளுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் வரவேற்று ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு, குடிநீர், குளிர்பானங்கள் வழங்கி மத நல்லிணக்க வரவேற்பு அளித்தனர்.
புவனகிரி: புவனகிரி மற்றும் மருதுார் பகுதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட 45 விநாயகர் சிலைகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் விஜர்சனம் செய்தனர்.
விருத்தாசலம்: நகரி்ல 40 இடங்களில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான நேற்று மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்ற மணிமுக்தாற்றிலும், வயலுார், பெரிய கண்டியங்குப்பம் ஏரிகளிலும் விஜர்சனம் செய்யப்பட்டன.
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில், பெருந்துறை, சிலம்பிமங்களம், வேளங்கிப்பட்டு, விருப்பாச்சி, ஸ்ரீமுஷ்ணம், ஓட்டிமேடு, காடாம்புலியூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.