Politics
கோவைக்கு 4,000... மதுரைக்கு ரூ.5,000... கிடுகிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் ; பயணிகள் அவதி

விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை ரூ.5000, சென்னை-ராமநாதபுரம் ரூ.5000, கோவை-ஈரோடு ரூ.4000, நெல்லை-நாகர்கோவில் ரூ.3800 வரை அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
பயணிகள் வருகை அதிகரிப்பைப் பயன்படுத்தி பேருந்து கட்டணத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பன்மடங்கு உயர்த்தி உள்ளனர்.
அதாவது, சென்னையிலிருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் சாதாரண நாட்களில் 700 முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை இருக்கும். ஆனால் இந்த கட்டணம் தற்போது 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
600 முதல் 2 ஆயிரத்து 600 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்த சென்னையிலிருந்து ராமநாதபுரத்துக்கான பேருந்துக் கட்டணமும் 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
400 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாயாக இருந்த கோவை, ஈரோடு பேருந்து கட்டணங்கள், 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
பொதுவாக 300 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரையிலான நெல்லை, நாகர்கோவில் பேருந்து கட்டணமும் 3 ஆயிரத்து 800 வரை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணம் ; பயணிகள் அதிர்ச்சி
பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடத்தும் இந்தத் தொடர் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
