சேதமடைந்த சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு
திருக்கழுக்குன்றம்: கொத்திமங்கலம் ஊராட்சியில், சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த, கொத்திமங்கலம் ஊராட்சியில், கொத்திமங்கலம், இரும்புலி, மேலப்பட்டு, புலிகுன்றம் ஆகிய பகுதிகள் உள்ளன.
இப்பகுதியினர் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, திருக்கழுக்குன்றம் சென்று வருகின்றனர். இங்குள்ள கான்கிரீட் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி தடுமாறுகின்றனர்.
வள்ளுவர் தெருவில் உள்ள கான்கிரீட் சாலை, சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலத்தில் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த சாலை வழியாக மங்கலம் செல்பவர்களும் அவதிப்படுகின்றனர்.
இரும்புலியில், தெருவின் இரண்டு முனை பகுதிகளில் மட்டும் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மைய பகுதியில் சாலை அமைப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.