வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் திருட்டு
வேப்பூர்: வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி
வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி செல்வமணி, 60; இவரது கணவர் இறந்த நிலையில், இவரின் 2 மகன்கள் வெளியூரில் தங்கி வேலை செய்கின்றனர்; மருமகள் பட்டுக்கோட்டையிலுள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரிலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் செல்வமணி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றார். நேற்று நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் சிலர், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 15 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசை திருடி தப்பி சென்றனர்.
நேற்று காலை செல்வமணி வீட்டின் பூட்டு உடைந்துள்ளதை கண்ட அக்கம்பக்கத்தினர் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்ட போது, அருகேயுள்ள வயலில் திருடிய நகைகளின் பெட்டி மற்றும் பைகளை மர்மநபர்கள் வீசி சென்றது தெரிந்தது.
திருட்டு நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலம் அப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது. திருட்டு குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.