Politics
காலை உணவு திட்ட விரிவாக்கம் முன்னேற்பாடு குறித்து ஆய்வு
கோவை: 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவு திட்டம் வரும் 17ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தரமான, சத்தான மற்றும் சுகாதாரமான உணவு உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவும், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதுடன், பள்ளி வருகை மற்றும் கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட அறிவுறுத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆன்டனி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காலை உணவு தயாரிப்பு சமையல் கூடத்தில் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.