Religion
சேந்தமங்கலம் அருகே 26ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பலிஜாவாரு பஜனை மடத்தில், நேற்று 26ம் ஆண்டாக, கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, கிருஷ்ணருக்கு பிடித்த விளையாட்டான உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், இரவு, 7:00 மணிக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வாண வேடிக்கை முடிந்ததும், மேள தாளங்களுடன் கிருஷ்ணர் சாரட்டு வண்டியில் ஏறி ஊர்வலமாக வந்தார். சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். அதேபோல், குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து அசத்தினர்.
* வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவில் பின்புறம் எழுந்தருளியுள்ள பாமா, ருக்மணி தாயார் சமேத வேணுகோபால சுவாமி சன்னதியில், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாளுக்கு பச்சை கற்பூரம் சாற்றி, வண்ண மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.