Religion
வான வேடிக்கைகள் முழங்க... அக்னி தீர்த்தத்தில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தம் கடலில் கரைக்கப்பட்டன.
செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதி பெற்ற அளவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் நகர் பகுதியில் திட்டக்குடி, நேதாஜி நகர், ஜேஜே நகர், அமிர்தபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் திட்டக்குடியில் இருந்து ரயில் நிலையம், காந்தி நகர், காவல் நிலையம், மேலத்தெரு வழியாக ராமநாதசுவாமி கோவில் வளாகத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அங்கு அக்னி தீர்த்தம் கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வு வான வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. மற்ற பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் நாளை இதேபோன்று ஊர்வலமாக வந்து அக்னி தீர்த்தம் கடலில் கரைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நிறைவுபெறும்.
