Religion
பக்தி வெள்ளத்தில் அதிர்ந்த மதுரை... 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் திரண்டனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் திரண்டனர். வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.
அதிகாலை 3.45 மணியளவில் 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் காலை 5.45 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டன. சிவாச்சாரியார்களால் கோயிலின் ராஜகோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7.40 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்வை காண மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை முக்கிய நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
