Religion
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு கோயிலில் குவிந்தனர்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில்கள், பெருமாள்கோயில்களில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயில்கள், கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சுவாமி தரிசனத்திற்கு அழைத்து வந்தனர். சில பகுதிகளில் உறியடி திருவிழா நடந்தது.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணஜெயந்தி 10 நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. தினசரி வெவ்வேறு தலைப்புகளில் ஸ்ரீநிவாசன் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். கோவிந்தபட்டாபிஷேகம், ராதா கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பிரார்த்தனை மைய நிர்வாகி கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்திருந்தனர்.
தேனி என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், அல்லி நகரம் வரதராஜ பெருமாள் கோயில்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். வீடுகளிலும் கிருஷ்ணர் பாதங்களை கோலமிட்டனர். சுவாமிக்கு வெண்ணெய், அவல், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு வழிபாடு செய்தனர்.
பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா தேனி: அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வி சங்க செயலாளர் பாக்கியகுமாரி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் கிருஷ்ணர்வாழ்க்கை வரலாறை விளக்கினார். மாணவர்கள், மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் வினோத்குமார் நன்றி கூறினார். பள்ளி ஆசிரியைகள், மேலாளர் கார்த்திகேயன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி, ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. முதல் நாளில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து வந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் பரதநாட்டியம், கோலாட்டம், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை 1:05 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் பட்டன.
2 ம் நாள் கோயில் வளாகத்தில் நடந்த பஜனை நிகழ்ச்சிக்குப்பின் பெண்கள் முளைப்பாரியுடன் நவநீத கிருஷ்ண சுவாமி ஊர்வலம் நடந்தது. நிறைவாக பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு பிரார்த்தனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை நாயுடு சங்க தலைவர் பால்பாண்டி தலைமையில் சமூக தலைவர் கண்ணபிரான், செயலாளர் காமாட்சி, பொருளாளர் காந்தையன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
தங்க கவச அலங்காரத்தில் கிருஷ்ணர் போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள் குருவாயூர் கிருஷ்ணர் தங்க கவச அலங்காரம், பெருமாள் சந்தான கோபால கிருஷ்ணன் அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். குழந்தைகள் கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்து பெருமாளின் தரிசனம் பெற்றனர். போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சலவை கல்லில் ஆன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
கூடலுார்: கூடலழகிய பெருமாள் கோயிலில் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோயிலில் எழுந்தருளியுள்ள நவநீதகிருஷ்ணனுக்கு வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. அலங்கார திருமஞ்சனம், விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் கண்ணன் பாடல்கள் பாடினர். துளசி, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கூடலுார் யாதவ மகா சபையினர் செய்திருந்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத்: கூடலுார் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகரத் தலைவர் ஜெகன் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கண்ணன், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பசாமி அறக்கட்டளை தலைவர் சக்திவேல், லோகநாயகி, கிரிதரன், த.வெ.க., மாவட்ட துணை செயலாளர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.