Politics
அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சோதனை; கிடைத்த முக்கிய ஆவணங்கள் – வெளியான தகவல்

அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சோதனை, முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்று தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் பண மோசடி செய்த வழக்கில் அரசகுமார் உள்ளிட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்களின் 49 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை DPI வளாகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைபேசிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கின் 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் முக்கியமான டிஜிட்டல் ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக மத்திய குற்ற புலனாய்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அன்பில் மகேஷ் இல்லத்தில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே போல் தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
