Politics
வட்டார கலைத்திருவிழாவில் அசத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழாவில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டு விழா நடத்தப்படுகிறது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்த இந்த விழா நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு கலைத்திருவிழா போட்டி, 'இளையோர் திறன்' என்ற மைய கருத்தின் அடிப்படையில், பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்ற மாணவர்கள், வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வடக்கு வட்டார வள மைய அளவிலான, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், கலைத்திருவிழா போட்டிகள் நேற்று வட்டார வள மையத்தில் நடந்தது. அதில், கவின் கலை நுண்கலை, இசை, நாடகம், நடனம் என நான்கு பிரிவுகளில், 18 வகையான போட்டிகள் நடைபெற்றன.
வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும், 29 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி போட்டிகளில் அசத்தினர். அதில், 20க்கும் மேற்பட்ட நடுவர்கள் பங்கேற்று மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்தனர்.
போட்டிகளை மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் சுகன்யா, கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ரஞ்சித்குமார், சுகந்திலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.